புதுடெல்லி: உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை திரும்ப அழைக்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், தங்களிடம் அனுமதி பெற வேண்டும் என்றுள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
அவர் கூறியதாவது, “புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நாட்டின் முதுகெலும்பைப் போன்றவர்கள். உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, பல்வேறு மாநிலங்கள், ஊரடங்கு காலத்தில் சரியாக நடத்தவில்லை. அவர்கள் எங்கள் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
அவர்களுக்கு, மாநிலத்திலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இதற்காக, கமிஷன் ஒன்றை மாநில அரசு அமைக்கவுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை மீண்டும் அழைக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், எங்களிடம் அனுமதி பெற வேண்டும்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாப்பது மாநில அரசின் கடமை. புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் திறமைகளை ஆய்வு செய்து, அவர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் பற்றி கமிஷன் தெரிவிக்கும். இதுவரை 23 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மாநிலத்துக்கு திரும்பியுள்ளனர்.
இவர்களில், மும்பையிலிருந்து திரும்பிய 75% பேரும், டில்லியிலிருந்து திரும்பிய 50% பேரும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மேற்கொண்ட சரியான நடவடிக்கைகளால்தான் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றார் அவர்.