அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதியாகிய நாளை, கொரோனா சவாலுக்கிடையே நடைபெறவுள்ளது. உலக வல்லரசு மற்றும் உலகின் பல நாடுகளில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதால், அந்நாட்டின் அதிபர் தேர்தல் உலகளவில் கவனத்தை பெறக்கூடியதாகும்.

பொதுவான அபிப்ராயத்தின்படி, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் பந்தயத்தில் முன்னணியில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனாலும், அவர் நிச்சயம் வென்றுவிடுவார் என்பது உறுதியில்லை.

அமெரிக்காவின் ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அந்நாட்டு சமூகம், அடுத்த 4 ஆண்டுகளுக்கு டொனால்ட் டிரம்ப் தேர்வுசெய்யப்பட்டால், அவருடன் இணைந்து செயல்பட தயாராகவே உள்ளனர். ஆனால், அவரின் வெற்றியானது, உலகளாவிய அளவில் ஏற்கப்படும் அளவிற்கு சிறந்ததா? என்பதுதான் கேள்வியே.

கொரோனா, பருவநிலை மாற்றம் மற்றும் ஜனரஞ்சக தேசியவாதம் ஆகியவற்றின் நோக்கில் டிரம்ப்பின் தேர்வு உலகளவில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.

கடந்த ஒரு நூற்றாண்டில் சந்திக்காத சுகாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளது இன்றைய உலகம். உலகம் பொருளாதாரம் பெருமளவில் சீரழிந்துள்ளது. கொரோனா பரவல் இப்போதைக்கு கட்டுப்படும் என்ற நம்பிக்கையில்லை.

எனவே, இப்படியான நெருக்கடியில், சுகாதாரப் பிரச்சினையில் அக்கறை செலுத்தக்கூடிய, அறிவியலை மதிக்கக்கூடிய, நிபுணர்களின் கருத்துக்களை கேட்கக்கூடிய, நாடுகளின் ஒற்றுமைக்கு உதவக்கூடிய ஒரு தலைவரே உலகத்திற்கு தேவை.

ஆனால், இந்தக் குணங்களுக்கு நேர்மாறாக இருக்கிறார் டிரம்ப். அவரின் செயல்பாடுகள் நிலைமையை சீராக்குவதற்கு பதிலாக, மோசமடையவே வைக்கின்றன. அவரால், உலகத்தில் வேற்றுமைகள்தான் அதிகரிக்கின்றன.

கடந்த 2000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உலகம் தற்போது சூடாகி வருகிறது. ஆனால், பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறார் டிரம்ப். கொரோனா விவகாரத்தில், தொடர்ந்து சீனாவையே குற்றம் சுமத்திக் கொண்டிருக்கிறார்.

உலகளவில் அகதிகள் பிரச்சினை மோசமடைந்து வருகிறது. உலக தலைவர்களிடையே இனவெறி, மதவெறி மற்றும் பிரித்தாளும் போக்கு அதிகரிக்கிறது. ஜனரஞ்சக தேசியவாதத்தை மிகவும் விரும்பும் நபராக இருக்கிறார் டிரம்ப். அதனால் இவருக்கு மோடி போன்றவர்கள் நல்ல நண்பர்களாக இருக்க முடிகிறது.

நன்றி: கல்ஃப் நியூஸ்