கருத்து சுதந்திரமும் விமானப் பயணமும் : அமைச்சரின் அதிரடி
சென்னை
கருத்துச் சுதந்திரம் தேவை என்றால் எந்த அரசியல் தலைவரும் விமானத்தில் பயணிக்க முடியாது என அமைச்சர் ஜெயகுமார் கூறி உள்ளார்.
நேற்று முன் தினம் தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசை பயணம் செய்தார். அப்போது அதே விமானத்தில் பயணம் செய்த ஷோபியா என்னும் ஒரு பெண் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டார். இதை ஒட்டி தமிழிசை புகார் அளித்ததால் அந்தப் பெண் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினர் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இது அவருடைய கருத்துச் சுதந்திரம் என பலரும் வாதிட்டு வருகின்றனர். தமிழக அமைச்சரும் அதிமுக முக்கிய பிரமுகருமான ஜெயகுமார் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது ஜெயகுமார், “விமானத்தினுள் ஷோபியா கோஷம் போட்டதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதித்தால் எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் விமானத்திலோ ரெயிலிலோ பயணிக்க முடியாது. விமானத்தின் உள்ளே எதிர்ப்பு கோஷம் இடுவது தலைவர்களுக்கு பாதுகாப்பு பிரச்னை என்பதால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தலாம்.
சுய விளம்பரத்துக்காக தங்களை முன்னிறுத்திக் கொள்ள இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுவதை ஜனநாயக உரிமையாக கொள்ள முடியாது. கருத்து சுதந்திரம் எனக்கூறி விமானத்துக்குள் போய் ஒழிக என கூச்சல் இடுவதை எப்படி அனுமதிக்க முடியும் ? யாராக இருந்தாலும் இடம், பொருள், ஏவல் பார்த்து நடந்துக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் போராட இடம் உண்டு என்பதற்காக எங்கு வேண்டுமானாலும் போராட முடியாது” என கூறி உள்ளார்.