கொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்

ஜெனிவா

கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனாம் கெப்ரிர்யேசஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலால் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.  இதுவரை 63.58 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில் 14.73 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.   கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து நாடுகளும் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றன.   குறிப்பாக அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த வைரஸ் பரவல் அதிகமாக உள்ளன.

நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார மைய தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனாம் கெப்ரிர்யேசஸ், “செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சென்ற வாரம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.    ஆனால் அது இந்த வாரம் மீண்டும் அதிகரித்ததால் இது குறித்து உறுதியாக எதுவும் சொல்ல முடியவில்லை.

பல நாடுகளில் விரைவில் விடுமுறை நாட்கள் வர உள்ளதால் இது குறித்து மன நிறைவு கொள்ள முடியாத நிலை உள்ளது.  இந்த காலத்தில் மக்கள் ஒன்றிணைந்து விடுமுறைகளைக் கொண்டாடுவது வழக்கமாகும்.  ஆனால் நாம் நம்மையும் நமது குடும்பத்தினரையும் நண்பர்களையும் அபாயத்தில் இருந்து தடுக்கும் நிலையில் உள்ளோம்.  நாம் நமது முடிவு என்னும் சூதாட்டத்தைக் கொண்டு அவர்கள் பாதுகாப்பைப் பணயம் வைக்க முடியாது.

உலக சுகாதார மையத்தைப் பொறுத்தவரை ஒரு விஷயம் தெளிவாக உள்ளது.  நாம் கொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் அது நமக்கு எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கப் பெரிதும் உதவியாக இருக்கும்.   நாம் அனைவரும் இணைந்து அதைக் கண்டறிய வுகான் நகரில் இருந்து பணியைத் துவங்க உள்ளோம்.   இந்த பணிகள் மூலம் விரைவில் வேறு எங்கிருந்தாவது பரவியதா என்பதைக்கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.