நாங்கள் நினைத்திருந்தால் நேற்றே ஆட்சி கவிழ்ந்திருக்கும்! தினகரன் அணி

சென்னை,

நாங்கள் நினைத்திருந்தால் நேற்றே ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்று அதிரடியாக கூறி உள்ளார் தினகரன் அணியை சேர்ந்த எம்எல்ஏவான தங்கத்தமிழ்செல்வன்.

அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள பிரிவு காரணமாக, எடப்பாடி தலைமையிலான அரசுக்கும், தினகரன் அணியினருக்கும் இடையே யாருக்கு ஆதரவு என்ற போட்டி எழுந்துள்ளது.

ஏற்கனவே ஓபிஎஸ் அணியினர் தனியா பிரிந்துள்ள நிலையில், தற்போது எடப்பாடி அணியும் இரண்டாக உடைந்துள்ளது. இதன் காரணமாக அதிமுக தற்போது 3 அணியாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வரும் 14ந்தேதி சட்டசபை கூட்டம் தொடங்க இருக்கிறது. அப்போது அணிகளின் பிரிவு காரணமாக ஆட்சி கவிழும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது தமிழக சட்டசபையில் சபாநாயகர் நீங்கலாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 134 பேர் உள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் 12 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

தற்போது அதிமுக அம்மா அணியில் ஏற்பட்ட பிளவு காரணமாக  29 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது வரை 93 எம்.எல்.ஏ.க்களே ஆதரவாக உள்ளனர்.

3 அணிகளாக அ.தி.மு.க. செயல்படுவதால் வருகிற 14-ந்தேதி சட்டசபை கூடும்போது, எடப்பாடி பழனிசாமி தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,  சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் இன்று பிற்பகல் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு அளித்து ஆட்சி கவிழ்வதில் இருந்து காப்பாற்றுவதா? அல்லது தனித்து செயல்படுவதா? என்பது குறித்தும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியின் எதிர்கால அரசியல் குறித்தும் நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் அணியை சேர்ந்த தங்கத்தமிழ் செல்வன்,

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப்பொதுச்செயலாளராக தினகரனும் இருந்து வருகிறார்கள்.

ஜெயக்குமாரை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், ஆட்சியை கவிழ்க்க நாங்கள் விரும்பவில்லை என்று கூறினார்.

நாங்கள்  நினைத்திருந்தால் நேற்றே எடப்பாடியின்  ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்றும், தினகரனுக்கு ஆதரவாக மேலும் 50 எம்எல்ஏக்கள் இன்று சந்திக்க இருக்கிறார்கள் என்றும் கூறினார்.

இதன் காரணமாக தமிழக அரசியல் மேலும் பரபரப்பு அடைந்துள்ளது…