மும்பை:

யஷ்வந்த் சின்கா 1990ம் ஆண்டுகளில் அப்போதைய பிரதமர்கள் சந்திரசேகர் மற்றும் வாஜ்பாய் ஆகியோரது அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி வகித்தார். பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்கா, இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் ‘நான் இப்போது பேச வேண்டும்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில், நாட்டின் பொருளாதார நிலையில் நிலவும் குளறுபடிகளை மேற்கோள்காட்டிஅருண் ஜெட்லியை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனை நான் இப்போது பேசவில்லை என்றால், தேசிய கடமையில் இருந்து தவறிவிட்டதாக அர்த்தமாகி விடும் என்றும் குறிப்பிட்டார். மத்திய அரசின் மீதான அவரது விமர்சனம் பா.ஜனதாவில் புயலை கிளப்பியுள்ளது.

அவருடைய விமர்சனத்தை காங்கிரஸ் வரவேற்று, பாஜ அரசின் மீது கேள்வி கணைகளை தொடுத்து வருகிறது. பொருளாதாரம் தொடர்பாக ‘யஷ்வந்த் சின்காவின் குற்றச்சாட்டு தவறு என்றால், நிரூபித்து காட்டுங்கள்’ என்று மத்திய அரசுக்கு பாஜ கூட்டணி கட்சியான சிவசேனா சவால் விடுத்துள்ளது.

இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமாவில், ‘‘நாட்டின் பொருளாதார நிலைமை தற்போது படுமோசமாக உள்ளது. இதனை மன்மோகன்சிங் மற்றும் ப.சிதம்பரம் போன்றவர்கள் வெளிப்படுத்த முயன்றபோது, அதனை மூடி மறைத்தார்கள். இப்போது, நீண்ட காலமாக நிதி துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த யஷ்வந்த் சின்கா, சில வெளிப்பாடுகளை தெரிவித்துள்ளார். இதற்காக அவர் நேர்மையற்றவர் என்றோ, தேசவிரோதி என்றோ சித்தரிக்கப்படலாம்.

ரஷியாவில் ஸ்டாலின் ஆட்சி செய்த போது அரசுக்கு எதிராக யாராவது பேசினால், அவர் இரவின் இருளில் மறைந்துபோய் விடுவார். அவரை மீண்டும் பார்க்க இயலாது. இதேபோல், யஷ்வந்த் சின்காவுக்கு இப்போது என்ன தண்டனை கிடைக்கும் என்பதை நாம் பார்ப்போம். யஷ்வந்த் சின்கா கூறிய குற்றச்சாட்டுகள் தவறு என்றால், மத்திய அரசு அதனை நிரூபித்து காட்டட்டும்.

நாட்டின் பொருளாதார நிலை சரிந்து கொண்டே செல்வதால் பா.ஜனதா மூத்த தலைவர்கள் பலர், மத்திய அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இருந்தாலும், ஆபத்துக்கு பயந்து அவர்களால் எதுவும் பேச முடியவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.