டில்லி,

ட்டல்களில்  சேவை கட்டணம் வசூலித்தால், நுகர்வோர்  நீதிமன்றத்துக்கு செல்லலாம் என்று நுகர்வோர் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மாதம் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக உணவகங்களில் உணவு பொருட்களுக்கு 18 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜிஎஸ்டி அமலாகி உள்ள நிலையில், உணவகங்களில் வழங்கப்படும் உணவுக்கு ஜிஎஸ்டியுடன் சேவைக்கட்டணமும் போடப்படுகிறது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து மத்திய நுகர்வோர் விவகாரத் துறை இதுகுறித்து உணவகக்ளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில்,  ஓட்டல்களில்  உணவை வழங்கும் போது சேவைக் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதமானது என்று தெரிவித்துள்ளது மேலும் உணவகங்கள் பில் அளிக்கும் போது அதில் சேவை கட்டணங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தால் நுகர்வோர்களை நீதிமன்றத்துக்குச் செல்லுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் குறித்த அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் போது அதற்குச் சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அது நுகர்வோரின் விருப்பத்துக்கு உரியது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து நுகர்வோர் விவகாரத் துறையின் செயலாளர் அவினாஷ் கே ஸ்ரீவஸ்தவா கூறியதாவது,

சேவை கட்டணம் என்பது டிப்ஸ் போன்றது, இதை அளிக்க வேண்டுமா, இல்லையா என்பதை நுகர்வோர் தான் முடிவு செய்ய வேண்டும் ஓட்டல் உரிமையாளர்கள் அல்ல.

நுகர்வோர் நீதிமன்றம் இது குறித்த வழிமுறைகளை கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட்டுள்ளதா கவும் இதனை உணவகங்களில் மீறினால் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு சென்று நியாயம் கேட்கலாம் என்றும்,

ஓட்டல் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களிடம்  கட்டாயப்படுத்திச் சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும்  உணவகங்களுக்குச் சேவை கட்டணம் அளிக்க உரிமை இல்லை.

அதே நேரம் வாடிக்கையாளர்கள் நினைத்தால் சேவை கட்டணத்தை  செலுத்தும் வகையில், பில்லில் அதற்கான இடத்தை காலியாக வைக்கலாம் என்றும், வாடிக்கையாளர் எவ்வளவு செலுத்த விரும்புகின்றார்கள் என்பதை அந்த வெற்றிடத்தில் குறிப்பிட்டுச் செலுத்தலாம்.

இதுபோன்ற விதிமுறைகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் 23 தேதியே வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு  ஸ்ரீவஸ்தவா கூறினார்.

ஆனால், சேவை கட்டணம் வசூலிப்பது  சட்ட விரோதம் இல்லை தேசிய உணவகங்களின் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.

நுகர்வோர் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் முறை, சட்டம் கிடையாது என்றும், ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக உணவங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், பொதுமக்கள் இடையில் நுகர்வோர் துறை தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகின்றது,  ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரகுல் குமார் கூறி உள்ளார்.