புதுடெல்லி:

முஸ்லிம்கள் மீது அக்கறை இருந்தால், பசு காவலர்களால் முஸ்லிம்கள் கொல்லப்படமாட்டார்கள் என பிரதமர் உறுதி அளிக்க முடியுமா? என ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவாய்சி கேள்வி எழுப்பியுள்ளார்.


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவராக புதிய மக்களவை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டபோது பேசிய மோடி, சாதி,மத ரீதியாக எங்களுக்குள் பாகுபாடு கிடையாது என்று சிறுபான்மையினர் கூறுகின்றனர்.

வாக்கு வங்கி அரசியல் நடத்திய அரசியல்வாதிகள் சிறுபான்மையினத்தவரை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்று கூறிய மோடி, அவர்களை பயத்திலும், பாதுகாப்பு இன்றியும் அவர்கள் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டினார்.

வாக்கு வங்கி அரசியல் ஆட்டம் காணத் தொடங்கியதும், பயம், பாதுகாப்பின்மை பறந்துவிட்டது.

சிறுபான்மையினத்தவரை வஞ்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்ற மோடி, சாதி, மத பாகுபாடு இன்றி நாம் ஒருவருக்கொருவர் தோள் கொடுப்போம். இறுதி வரை இந்திய மக்களுக்காக நான் உழைப்பேன் என்றார்.

பிரதமர் மோடியின் உரைக்கு பதில் அளித்த அகில இந்திய மஜ்லிஸ்-இ-இட்டேஹதுல் முஸ்லிமீன் கட்சி (ஏஐஎம்ஐஎம்)தலைவரும், ஐதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவாய்சி, மோடிக்கு உண்மையிலேயே முஸ்லிம்கள் மீது அக்கறை இருந்தால், பசு காவலர்களால் முஸ்லிம்கள் கொல்லப்பட மாட்டார்கள் என  உறுதி அளிக்கத் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

வாழ்வது உரிமை என்று மனிதர்களுக்கு தான் அரசியல் சாசனம் கூறுகிறது. விலங்குகளுக்கு அல்ல. பிரதமர் உண்மையை உணர்ந்திருந்தால், சிறுபான்மையினத்தவரிடம் உள்ள பயம் நீங்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

பாஜகவில் வெற்றி பெற்ற 300 எம்பிக்களில் முஸ்லிம்கள் எத்தனை பேர்? இதுதான் பிரதமர் மோடியின் பேச்சில் முரண்பாடு இருப்பதை காட்டுகிறது என்றார்.