மே 14-க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தாவிட்டால்…….! ஐகோர்ட்டு எச்சரிக்கை!

சென்னை:

மிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அடோபர் மாதம்  24-ந் தேதியுடன் முடி வடைந்தது.  அதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 17, 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், இடஒதுக்கீடு சரிவர பின்பற்றவில்லை என்று திமுக வழக்கு தொடர்ந்ததையடுத்து உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் தேர்தல் குறித்த விசாரணையின்போது பல்வேறு காரணங்களை கூறி, அவகாசம் தேவை உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசும், தமிழக தேர்தல் ஆணையமும் தாமதப்படுத்தி வந்தன.

கடந்த மாதம் 21ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ‘மே 14-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில்  இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவில், மே 14-ந்தேதிக்கு முன்பு தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது’ என்றும்,  , ‘வாக்காளர்கள் பட்டியலை தயாரிப்பது, தேர்தல் குறித்த பயிற்சி வகுப்புகள், வேட்பு மனுக்கள் தாக்கல் மற்றும் பரிசீலனை ஆகியவைகளுக்கு தேவையான கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, மே 14-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது’ என்று கூறப்பட்டிருந்தது.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், மாநில தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரி வித்தனர். மேலும், “உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் ஏன் சிரமம், ஏன் இவ்வளவு? பிரச்சினை களை தீர்க்கவே நீதிமன்றங்கள் உள்ளன, அரசை நடத்துவதற்கு அல்ல. மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்’ என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.