சென்னை,

மிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கையை 60ஆக உயர்த்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்,  தமிழ்நாட்டை 60 மாவட்டங்களாகப் பிரிக்க சட்டசபையில் மசோதா கொண்டு வரவேண்டும் எனவும்  பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பத்தூரை தலைமையகமாக ஏற்படுத்தும் வகையில், வேலூர் மாவட்டத்தை  இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்க வலியுறுத்தி பாமக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பாமக தலைவர் ராமதாஸ் பேசியதாவது,

தமிழகத்தில் பெரம்பலூருடன் இணைந்திருந்த அரியலூரை தனி மாவட்டமாகப் பிரிக்க வேண்டும் என திமுக ஆட்சி காலத்தில் ஜி.கே. மணி சட்டசபையில் குரல் எழுப்பினார். அதனால், அரியலூர் தனி மாவட்டமாக்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் அதனை பெரம்பலூருடன் இணைத்தார். பிறகு பாமக தொடர்ந்து போராடி அரியலூரை தனி மாவட்ட மாக்கியது.

தற்போது, திருப்பத்தூரை தலைநகராகக் கொண்டு வேலூரை இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும் என்று போராடி வருகிறோம்.

மக்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்ற எண்ணம் இங்குள்ள போஜனராஜன்களுக்குக் கிடையாது.
மாவட்டத்தைப் பிரித்தால் ஒவ்வொரு குடும்பமும் தனிப்பட்ட ரீதியில் பலனடையும்.

காரணம் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் வளர்ச்சி ஏற்படும்.

வேலூர் மாவட்ட எல்லை அரக்கோணம் அருகே மாரிமங்கலம் – லட்சுமிபுரம் வரை 200 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. 6 ஆயிரத்து 77 சதுர கிலோ மீட்டர் கொண்டதாக உள்ளது. மக்கள் தொகை 39 லட்சத்து 36 ஆயிரத்து 331 ஆக உள்ளது. ஆகையால் அரக்கோணம், திருப்பத்தூர் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரைப் பார்க்கவேண்டுமென்றால் 100 கி.மீ தூரம் பயணம் செயுது போகவேண்டிய நிலை உள்ளது.

மேலும், வேலுர் மாவட்டத்தில் தான் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு அடுத்து அதிக மக்கள் தொகை உள்ளது.

இந்திய மாநிலங்களின் 7 மாநிலங்களின் மக்கள் தொகையை விட, வேலூர் மாவட்ட மக்கள் தொகை அதிகம்.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் வளர்ச்சி குறைவான கடைசி 5 மாவட்டங்களில் வேலூர் மாவட்டமும் ஒன்று.

ஆனால், அளவில் சிறியதாக உள்ள கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள்தொகை 18 லட்சத்துக்கும் குறைவாக உள்ளதால், ஆட்சியருக்கு அதை நிர்வகிப்பது எளிதாக உள்ளது.

அதனால் வளர்ச்சிப் பணிகளும் நிறைவேறுகிறது. ஆனால், வேலூரில் அதில் சாத்தியமில்லாமல் உள்ளது.

கடந்த சட்டசபை தேர்தல் அறிக்கையில் நாங்கள், 12 லட்சம் மக்கள்தொகைக்கு 1 மாவட்டம் என கூறியிருந்தோம். பாமக ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக அதை செய்யும்.

தமிழகத்தை 60 மாவட்டங்களாகப் பிரிக்க வலியுறுத்தி வருகிறோம். அதற்காக மறுசீரமைப்பு ஆணையத்தை உடனடியாக உருவாக்க வேண்டும்

அரியலூர், பெரம்பலூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களை தவிர்த்து, வேலூர், சேலம், திருவள்ளூர், நெல்லை, விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டகளை 3 ஆகவும், சென்னை மாவட்டத்தை 4 ஆகவும், மற்ற மாவட்டங்களை 2 ஆகவும் பிரிக்க வேண்டும்.

அடுத்த சட்டசபை கூட்டத்தொடருக்குள் இதனை மசோதாவாகக் கொண்டு வர வேண்டும். அப்படி ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் மசோதா கொண்டுவரபடவில்லையெனில் பாமக மநிலம் முழுவதும் போராடும்.

இந்தியாவை விட அமெரிக்காவில் மக்கள்தொகை குறைவு, பரப்பளவில் பல மடங்கு அதிகம். அங்கு 50 மாநிலங்களாக பிரித்து உள்ளார்கள்.

ஆனால் இங்கு ஒரே உணவு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என மோடி அரசு கொண்டு வர நினைக்கிறது.

அதுமட்டுமில்லாமல் கல்வி கொள்கையில் தலையிட்டு, மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நாங்கள் தான் தேர்வு நடத்துவோம் என மாணவர்கள் வாழ்க்கையை அழித்து வருகிறார்கள்.

இவ்வாறு ராமதாஸ் பேசினார்.