மலப்புரம்:

கேரளா மாநிலம் மலப்புரம் லோக்சபா தொகுதி எம்.பி.யாக இருந்தவர் முஸ்லிம் லீக் தலைவர் அகமது மரணம் அடைந்ததை தொடர்ந்து இங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் பாஜ சார்பில் ஸ்ரீ பிரகாஷ் போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெற்றால் சிறந்த மாட்டு இறைச்சி கூடங்களை உருவாக்குவேன் என வாக்குறுதி அளித்து வருகிறார்.

இறைச்சி கூடம் நடத்துவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் மசோதா குஜராத்தில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்து இவரிடம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதில் கூறுகையில், ‘‘ மாட்டு இறைச்சி உண்பதை பாஜ எதிர்க்கவில்லை. நல்ல மாட்டு இறைச்சி தான் பிரச்னை’’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,‘‘நாம் விரும்பும் உணவை சாப்பிடுவதில் தவறில்லை. மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்படவில்லை. தவறான தகவல் பரப்பப்படுகிறது. ஆயுள்தண்டனை என்பது மாட்டு இறைச்சி கூடங்கள் நடத்துவோருக்கு தான். சிறந்த இறைச்சி கூடங்களை தொடங்க என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி மேற்கொண்டு, சிறந்த மாட்டு இறைச்சிகளை வழங்குவேன்’’ என்றார்.

தொடர்ந்து ஸ்ரீ பிரகாஷ் கூறுகையில், ‘‘காங்கிரஸ் ஆட்சியில் தான பல மாநிலங்களில் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. சில மாநிலங்களில் இறந்த கால்நடைகளின் இறைச்சி உணவாக மாறிவிடுகிறது. அதனால் மாட்டு இறைச்சிக்கு தடை என யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

மல்லப்புரம் தொகுதி முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியாகும். மாட்டு இறைச்சி தொடர்பான பாஜ தலைமையின் போலியான கருத்துக்களை இவரும் தெரிவித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் வடகிழக்கு பகுதிகளில் மாட்டு இறைச்சியை தடை செய்யமாட்டோம் என்று அந்தந்த மாநிலங்களின் பாஜ தலைவர்கள் அறிவித்தனர்.

அதே நாளில் குஜராத்தில் மாட்டு இறைச்சி கூடம் நடத்துபவர்கள் பிடிபட்டால் ஆயுள் தண்டனை விதிக்கும் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. அதே பாஜ ஆளும் சட்டீஸ்கர் மாநிலத்தில் மாடுகளை கொன்றால் தூக்கிலிடுவோம் என்று முதல்வர் ராமன் சிங் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த பிப்ரவரியில் நாடாளுமன்ற வளாகத்தில் மயக்கமடைந்த அகமது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். பட்ஜெட் ஒத்திவைக்கப்படுவதை தவிர்க்க இவரது உடல் நிலை தொடர்பான தகவல்களை தெரிவிக்காமல் தாமத்தப்படுத்தியது என்று மத்திய அரசு மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.

பெரும் விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தது. சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மருத்துவமனைகஅகு நேரில் சென்றும் அவர்களை கூட பார்க்கவிடாமல் மருத்துவமனை நிர்வாகம் கெடுபிடிகளை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.