சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் முகக்கவசம் அணியாமல், வீட்டை விட்டு  வெளியே வரும் பாதசாரிகளுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும், வாகனங்களில் வரும் ஓட்டுநர்களுக்கு, அவர்களின் உரிமம் இடைநிறுத்தம் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில், கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி இன்று பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.

சென்னை மாநகராட்சி  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

“கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசால் மாநிலம் முழுவதும் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி தொற்று நோய்கள் சட்டம் 1987 பிரிவு 2-ன் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்துப் பொதுமக்களும் வெளியே வரும்போது, கரோனா வைரஸ் நோய் தொற்று சமூகப் பரவலைத் தவிர்ப்பதற்காக முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறும் நபர்கள் குற்றம் செய்ததாக கருதப்பட்டு காவல் துறையின் மூலம் அவர்களின் பயணம் செய்யும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு இடை நிறுத்தம் செய்யப்படும்.

மேலும், முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பாதசாரிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

இந்த நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  கூறி யுள்ளார்.