download
கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது.
செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.
நள்ளிரவு….
போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. “காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.. இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்கிறேன்”  என்று கெஞ்சலாக அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.
“படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது.
நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.
அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று “சுமைதாங்கி’ என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர்.  அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.
நள்ளிரவு ஷூட்டிங்.. ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும்.  ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.
வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பின்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார். . “இந்தக் கார்களை கவனித்தீர்களா..? . இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது.  இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன்.  நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது!” என்றாராம்!