சென்னை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்க மறுத்தால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சட்ட ரீதியிலான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று சென்னை உயர் நீதி மன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சிஇ ஆணையத்தில் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளது என்பது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம்  ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் முத்தையா  என்பவர் கோரியிருந்தார். இதில் அவருக்கு தகவல்கள் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,

கடந்த 2006, 2007, 2008-ல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் எத்தனை அரசு பணி யிடங்கள் காலியாக இருந்தன? அதில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டன? வன்னியர் சமூகத்தினருக்கு எத்தனை அரசு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன? என்பது போன்ற விவரங்களை வழங்கக் கோரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தேன். எனக்கு தகவல்களை வழங்க டிஎன்பிஎஸ்சிக்கு  மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்துசெய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் தேர்வாணைய செயலர் வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் கோரும் தகவல்களை வெளியிட்டால் சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது.  விசாரணையைத் தொடர்ந்து, நேற்று இடைக்கலத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில்,  மனுதாரர் கோரியுள்ள தகவல்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீபிததி,  வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி, தகவல் வழங்க மறுக்கும் அதிகாரிகள் பொது தகவல் அலுவலர் போன்ற பணியில் நீடிக்க தகுதியற்றவர்கள் என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.

மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை வழங்க மறுத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சட்ட ரீதியிலான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்த நீதிபதி,  இதுதொடர்பாக அனைத்து அரசு, பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அரசு சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு  உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபர் 14-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.