“காஸ்ட்லி” காளான் சாப்பிடாமலேயே மோடி போல பளபளப்பாக வேண்டுமா?

மோடி

பிரதமர் மோடி, தலா 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐந்து காளான்களை ஜப்பானில் இறக்குமதி செய்து தினமும் சாப்பிடுகிறார். இப்படி தினமும் நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள காளான் சாப்பிட்டுத்தான் கருப்பாக இருந்த அவர் சிகப்பாக பளபளப்பாக ஆனார்” என்று குஜராத் காங்கிரஸ் பிரமுகர்  அல்பேஷ் தாகூர்  சொன்னாலும், சொன்னார்.. சமூகவலைதளங்களில் மோடியை ஆளாளுக்கு பிரித்து மேய்கிறார்கள்.

சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும். நம்மால் தினம் ஐந்து லட்ச ரூபாய் செலவு செய்து ஜப்பான் காளான் எல்லாம் சாப்பிட முடியாது… ஆனால் முகம் பளபளப்பாக வேண்டும்.. என்ன செய்யலாம்?

சிம்ப்பிளான ஐடியாக்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

சரியான தூக்கம், சரியான உணவு முறை, உடற்பயிற்சி ஆகியவை இரந்தாலே முகம் பளபளக்கும். இது ஆரோக்கியத்தின் அடிப்படையிலானது.

அடுத்து சில க்ரீம்கள் பற்றி பார்ப்போம்.

அரிசி மற்றும் எள் ஸ்கரப்

சம அளவு எள் மற்றும் அரிசியை இரவில் ஊற வைத்துக் கொள்ளவும். காலையில் அதனை நன்றாக அரைத்து உடல் மற்றும் முகத்தில் பூசவும். சில நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.  இதனால் சரும வறட்சி குறைவதோடு, முகமும் பொலிவாகும்.

ஸ்லீப்பிங் பேக்ஸ்

இரவு படுக்கும் முன்.. முகத்தை நன்றாக சுத்தம் செய்து கொண்டு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இரண்டு தேக்கரண்டி ஸ்லீப்பிங் பேக்கை எடுத்து முகத்தில் மேல் நோக்கியவாறு நன்றாக மசாஜ் செய்யுங்கள்.  இது எளிதாக சருமத்தினால் உறிஞ்சப்படுவதால் பிசுபிசுப்பான உணர்வு தோன்றாது. காலையில் எழுந்த பின் முகத்தை நன்றாக..  குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

 

பால்

சருமத்திற்கு பளபளப்பு தரும் ஒரு இயற்கையான அற்புதமான பொருள் பால். குறைந்த கொழுப்பு கொண்ட பாலை, உங்கள் சருமம் உள்வாங்கும் வரை மென்மையாக உங்கள் முகத்தில் மேல் நோக்கி தடவுங்கள். பிறகு முகம் கழுவி உலர விடவும். பாலானது கரும்புள்ளிகளை நீக்க மட்டுமின்றி, உங்கள் முகத்திற்கு ஊட்டம் அளிக்கும்.

ஸ்கரப் மற்றும் மாய்ஸ்சுரைசர்

இரவு  படுக்கும் முன் முகத்தில் உள்ள மேக்கப்களை ரோஸ் வாட்டர் கொண்டு நீக்கவும். பிறகு தேன் மற்றும் மூல்தானி மெட்டி கலந்து முகத்தில் 15 நிமிடங்கள் உலரவிடுங்கள்.  பின் சிறிது தண்ணீர் கொண்டு மென்மையாக இரண்டு நிமிடம் நன்றாக ஸ்கரப் (மசாஜ்) செய்து குளிர்ந்த நீரில் அலசுங்கள். அடுத்து க்ரீம்மை முகத்தில் தடவி மாய்ஸ்சுரைசஸ் செய்யுங்கள்.   தினமும் இப்டி செய்து வந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

கண்களுக்கு…

தூக்கமின்மை மற்றும் அதிக நேரம் கணினியை உபயோகித்தல் போன்றவற்றால் கண்ணில் கருவளையம் தோன்றலாம். தூங்கும் போது கண் மாஸ்க் பயன்படுத்தவும் அல்லது விளக்கெண்ணெய் தடவுங்கள்.   தூங்கி எழுந்தவுடன் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவுங்கள்.  இவற்றை செய்தால் கண்களில் உள்ள கருவளையம் மறையாவிட்டாலும் கூட, உங்கள் கண்கள் புத்துணர்ச்சியோடு  தெரியும்.

எண்ணெய்

குளிர்காலங்களில் முகத்தில் ஆயுர்வேத எண்ணெய்களை பயன்படுத்துவது முகத்திற்கு பொலிவைத் தரும். . வறட்சியான சருமம் உள்ளவர்கள் ஆயுர்வேத எண்ணெய்களை இரவில் தடவிக் கொண்டு காலையில் கழுவினால் முகம் பிரகாசிக்கும். சாதாரண சருமம் உள்ளவர்கள் முகத்தில் தடவி ஒரு மணிநேரம் கழித்து மெதுவாக மசாஜ் செய்யலாம்.

சரிதானே வாசகர்களே.. பெரும் செலவு இல்லாத அழகுக் குறிப்புகள் ஓகே தானே..!