ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் ஐஜி பொன்.மாணிக்கவேல் திடீர் ஆய்வு: கும்பகோணத்தில் பரபரப்பு

கும்பகோணம்:

சிலை திருட்டு, கடத்தல் குறித்து விசாரித்து வரும் ஐ.ஜி.பொன்மாணிக்க வேல் தலைமையிலான குழுவினர் இன்று கும்பகோணம்  ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் திடீர் என்று ஆய்வு மேற்கொண்ட னர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரபலமான ஆதி கும்பேஸ்வரர் என்ற சிவாலயம் அமைந் துள்ளது. 1300 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படும் இந்த கோவிலில் உள்ள சிலைகள் குறித்து சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

தமிழகம் முழுவதும் கோவில்களில் உள்ள சிலைகள் கடத்தப்பட்டது, திருடப்பட்டது, மாற்றப்பட்டது போன்ற புகார்கள் குறித்து விசாரணை நடத்திய சென்னை உயர்நீதி மன்றம், ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

அதன்படி, பொன்மாணிக்க வேல் தலைமையிலான தனிப்படையினர், பல கோவில்களில் ஆய்வு செய்து வருகின்றனர்.  சமீபத்தில் தஞ்சை பெரிய கோவிலில் சில முறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், இன்று கும்பகோணத்தில் உள்ள பழம்பெரும் சிவாலயமான ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிலை தடுப்பு பிரிவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இன்று காலை 7.30 மணியளவில் கோவிலுக்கு  ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன் வந்தார். தொடர்ந்து, கோவிலில் இருந்த ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை சிலை, மற்றும் நாயன்மார்கள் சிலை, விநாயகர்சிலை, பஞ்ச மூர்த்தி சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கோவில் ஊழியர்களிடமும் சிலைகள் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார்.

சுமார் ஒருமணிநேரம் கோவில்களில் உள்ள சிலைகளை அவர் ஆய்வு செய்து விட்டு வெளியேறினார். இது கும்பகேணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் இந்த மாதத்துடன் பணியில் இருந்து ஓய்வுபெற உள்ளார். இதன் காரணமாக சிலை தொடர்பான வழக்குகள் என்னவாகும் என்றும் கேள்விக்குறியாகி உள்ளது.