சென்னை: எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் கூட்டாக அமைத்துள்ள வழிகாட்டு குழுவில் பெண்கள்  மற்றும் பல மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதனால், அதிமுகவில் மீண்டும் பூசல் ஏற்பட்டு உள்ளது.

அதிமுகவில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த முதல்வர் வேட்பாளர் தொடர்பான இழுபறி, கட்சியின் வழிகாட்டுதல் குழு போன்றவை இன்று அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டன. அதன்படி,   அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக அதிமுக கட்சி செயல்பாடுகளை தீர்மானிக்கும் வகையில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனின் ஒப்புதலுடன் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுகவின் இந்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், காமராஜ், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் பா.மோகன் என மொத்தம் 11 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 6 பேரும், முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வழிகாட்டுதல் குழுவில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்றும், இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் தரவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ள. அதிமுகவின் மூத்த தலைவர்களான  பண்ருட்டி ராமச்சந்திரன், அன்வர்ராஜா, நத்தம் விஸ்வநாதன், அக்ரி கிருஷ்ணமூர்ர்த்தி, கோகுலா இந்திரா, வளர்மதி போன்ற முக்கிய நபர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு  கட்சியின் வழிகாட்டுதல் குழுவில் இடம் அளிக்கப்படவில்லை என்பதால், அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா உயிரோடு இருந்போது, கட்சி மற்றும் ஆட்சியின் ஒவ்வொரு செயலிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். அதற்கான பல்வேறு புதிய திட்டங்களையும் அறிவித்து, பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருந்தார். ஆனால், அவரது மறைவுக்கு பிறகு, எடப்பாடி ஆட்சியில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதுபோல கட்சியிலும்  பெண்களுக்கு முக்கித்துவம் கொடுக்கப்படுவது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   அதிமுகவில் தற்போது அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழுவில் ஒரு பெண்ணுக்கு கூட இடம் வழங்காமல் பெண்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது, அதிமுக மகளிர் அணியினருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பதவி தொடர்பான இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட நிலையில், பதவிகளை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பல மூத்த தலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், கட்சியில் மீண்டும் பூசல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.