சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை புத்தகத்தில், கூட்டணி கட்சியான தேமுதிகவின் சின்னமான முரசு சின்னம் (வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது)  பதியப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு வழங்கும் தொகுதிகள் விவகாரத்தில் இழுபறி நீடித்து வருவதால், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிமுக, கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  பாமகவுக்கு  23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜகவுக்கு அதிகபட்சமாக 20 தொகுதிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதுபோல தேமுதிகவுக்கு அதிகபட்சமாக 12 தொகுதிகள் மட்டுமேஒதுக்க முடிவு செய்ததாகவும், தற்போது 15 தொகுதிகள் வரை கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தேமுதிக பொருளாளர் பிரேமலதா, தேமுதிகவுக்கு 41 சீட் ஒதுக்க வேண்டும் இல்லையில், 3வது அணி அமைப்போம் என்று அதிமுகவுக்கு மிரட்டல் விடுத்திருந்த நிலையில், அதிமுக தலைமை அதை கண்டுகொள்ளாமல் , தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர்  12 தொகுதிகள் வரை ஒதுக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அதை தேமுதிக ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், இறுதியாக 15 தொகுதிகள் கொடுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.ஆனால், தேமுதிக தரப்பில் 18 தொகுதிகளாவது வேண்டும் என கெஞ்சி வருகின்றனர்.

இந்த நிலையில், பாமக இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கை புத்தகத்தில், கூட்டணி கட்சிகளான அதிமுக, பாஜகவின் சின்னங்கள் பதியப்பட்டுள்ள நிலையில்,  தேமுதிகவின் முரசு சின்னம் பதியப்படாமல் விடுபட்டுள்ளது. இது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,   அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகலாம் அல்லது வெளியேற்றப்படலாம்  என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.