பிரிக்ஸ் பல்கலைக்கழக தர வரிசை பட்டியல்… முதல் 10 இடங்களில் மும்பை ஐஐடி, பெங்களூரு ஐஐஎஸ்சி

லண்டன்:

பிரிட்டனை சேர்ந்த குவாக்கோரெலி சைமண்ட்ஸ் என்ற உயர்கல்வி ஆய்வு நிறுவனம் பிரிக்ஸ் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடங்களில் மும்பை ஐஐடி, பெங்களூரு ஐஐஎஸ்சி ஆகியவை இடம்பெற்றுள்ளது. சீனாவை சேர்ந்த 7 பல்கலை க்கழகங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

கடந்த முறை 6ம் இடத்தில் இருந்த பெங்களூரு ஐஐஎஸ்சி தற்போது 10ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 13வது இடத்தில் இருந்த மும்பை ஐஐடி தற்போது 9வது இடத்தை பிடித்துள்ளது. சீனாவின் த்சிங்குவா பல்கலைக்கழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. முதல் 25 இடங்களில் டில்லி, காராக்பூர், சென்னை ஐஐடி.க்கள் இடம்பெற்றுள்ளது.

ரூர்கி, கவுகாத்தி, கொல்கத்தா பல்கலைக்கழகம், ஜதாவ்பூர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், ஐதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவை முதல் 100 இடங்களில் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் பிரேசில் ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த 300 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளது.

இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதத்தில் வெளியான உலக பல்கலைக்கழக தர வரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் இந்திய கல்வி நிறுவனங்கள் ஒன்று கூட இடம்பெறவில்லை.

இதை தொடர்ந்து கடந்த அக்டோபரில் வெளியான ஆசிய பல்கலைக்கழகங்களின் தர வரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 9 இ ந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றன. இதில் முதல் 10 இடங்களில் ஒரு இந்திய பல்கலைக்கழகம் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.