மாணவி பாத்திமா தற்கொலை: ஐஐடி பேராசிரியர்கள் 3பேருக்கு மத்திய குற்றப்பிரிவு சம்மன்!

சென்னை:

நாட்டின் பிரசித்தி பெற்ற ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக சென்னை ஐஐடியில் முதலாண்டு படித்து வந்த கேரள மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக,  ஐஐடி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த், ஹேமச்சந்திரன் ஆகிய 3பேர் விசாரணைக்கு ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா தற்கொலை செய்த கொண்ட விவகாரம் பூதாகரமாக கிளம்பி உள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. வழக்கு தொடர்பாக ஏற்கனவே மாநகர காவல்ஆணையர் ஐஐடிக்கு சென்று பேராசிரியர்களிடம் விசாரணை நடத்திய நிலையில்,  குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேராசிரியர்களும் நேரில் ஆஜராக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கை விசாரித்து வரும், மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையராக இருக்கும் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர், கடந்த  சனிக்கிழமை பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் தங்கியுள்ள கேரள சமாஜத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து, பாத்திமா பயன்படுத்திய டைரி,  லேப்டாப், ஹார்ட் டிஸ்க், செல்போன்  போன்றவை பெறப்பட்டதாகவும்,  பாத்திமா உடலை முதலில் பார்த்த நபர் தங்களிடம் பேசிய ஆடியோவையும் காவல்துறையினர் பெற்றுக்கொண்டதாகவும், பாத்திமாவின் தந்தை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வழக்கில் புதிய திருப்பமாக பாத்திமா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐஐடி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், மிலிந்த், ஹேமச்சந்திரன் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.