அயோத்தி: புகழ்பெற்ற சென்னை ஐஐடி, மத்திய கட்டட ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் நிபுணர்கள் ராமர் கோவில் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அயோத்தி நகரில் 67 ஏக்கர் நிலப்பரப்பில் ராமர் கோயில் பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது நகரா என்ற கோயில் கட்டிடக் கலை பாணியில், இந்த கோயில் வடிவமைக்கப்படுகிறது. 10 ஏக்கரில் கோயில், எஞ்சிய இடத்தில் கோயில் வளாகம் அமைக்கப்படும்.

இந் நிலையில், ராமர் கோவில் 1000 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வகையில் கற்களால் தான் கட்டப்பட்டு வருகிறது என்று கட்டுமானத்தை மேற்கொண்டுள்ள அறக்கட்டளை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இதுகுறித்து ராம ஜென்ம பூமி தீர்த்தசேத்திரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது: புகழ்பெற்ற சென்னை ஐஐடி, மத்திய கட்டட ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த நிபுணர்கள் ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

லார்சன் அன்ட் டர்ப்போ நிறுவனம் பொதுவான கட்டுமானப் பணிகளை கவனித்து வருகிறது. அதே நேரத்தில் அயோத்தி நில மண்வளம் , நில நடுக்கத்தை தாங்கும் வலிமை போன்றவற்றை சென்னை ஐஐடி நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். கோவில் கற்களால்தான் கட்டப்படுகிறது. கிட்டத்தட்ட 10 ஆயிரம் தாமிர கம்பிகள் தேவைப்படுகின்றன. பக்தர்கள் தாமிரக் கம்பிகளை கோவிலுக்கு தானமாக வழங்கலாம் என்று கூறியுள்ளார்.