சென்னை,

சென்னை ஐஐடி வளாகத்தில்  மாட்டிறைச்சி விழா நடத்திய மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்து, நடவடிக்கை எடுக்காத ஐஐடி டீன்-ஐ கண்டித்து  சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் மாட்டிறைச்சி விழா நடத்தியதற்காக, மற்றொரு பிரிவு மாணவரால் தாக்கப் பட்ட சூரஜ் மருத்துவ செலவுகளை ஐஐடி நிர்வாகம் ஏற்க வேண்டும் என்றும்,

தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து மாணவர்களுடன் டீன் சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால், அவர் மாணவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். ஆனால் விசாரணை குழு அமைப்பதாக கூறி உள்ளார்.

இதன் காரணமாக பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

தாக்கப்பட்ட மாணவர் சூரஜ்-ஐ  ஐ.ஐ.டி. டீன் மற்றும் நிர்வாகத்தினர் இதுவரை சந்திக்காமல் இருப்பதற்கும் மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மாணவர் சூரஜ் தாக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்காமல் விசாரணைக்குழு அமைப்பதற்கு ஐ.ஐ.டி. மாணவர்கள் கண்டனம் தெரிவித்து ஐ.ஐ.டி வளாக பிரதான நுழைவு வாயில் முன்பு மாணவர்கள்  உள்ளிருப்பு  போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.

மாணவர்கள் போராட்டம் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.