இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் உருவாக்கி ஐஐடி மெட்ராஸ் சாதனை

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் உருவாக்கியுள்ளனர். சக்தி என அழைக்கப்படும் இந்த மைக்ரோ பிராசசரை கம்ப்யூட்டிங் மற்றும் இதர சாதனங்களில் பயன்படுத்த முடியும்.

iit_madras_1541073249

இந்த மைக்ரோ பிராசசர் குறைந்த திறன் கொண்ட வயர்லெஸ் சிஸ்டம் மற்றும் நெட்வொர்க்கிங் சிஸ்டங்களில் பயன்படுத்த முடியும். இதனால் வெளிநாட்டு மைக்ரோ பிராசசர்களை நாடவேண்டிய அவசியம் இனி ஏற்படாது. இந்த மைக்ரோ பிராசசரை சர்வதேச தரத்துக்கு இணையாக பயன்படுத்த முடியும்.

சக்தி மைக்ரோ பிராசசர் சண்டிகரில் உள்ள செமிகண்டக்டர் ஆய்வகம் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஃபேப்ரிகேட் செய்யப்பட்டது. அந்த வகையில் முற்றிலும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்ட முதல் மைக்ரோ பிராசசர் என்ற பெருமையை சக்தி பெற்றுள்ளது என ஐஐடி மெட்ராஸ் தெரிவித்துள்ளது.

முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதால் வழக்கமான ஹார்டுவேர் பிராசசர்களில் ஏற்படும் ட்ரோஜன், மால்வேர் மற்றும் இதர பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.

iit

சக்தி பிராசஸர்களை மிகமுக்கிய துறைகளான பாதுகாப்பு, அணு ஆயுத கட்டமைப்பு, அரசு அலுவலகம் மற்றும் பிற துறைகளில் பயன்படுத்தும்போது குறிப்பிடத்தக்க பயன்களை பெற முடியும். இந்த மைக்ரோ பிராசசர் வடிவமைப்பு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிதி உதவியால் சாத்தியமாகியுள்ளது.

இது குறித்து ஐஐடி மெட்ராஸ் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் காமகோடி வீழிநாதன் பேசுகையில், “டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடர்பாக பல்வேறு அமைப்புகளில் பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யக்கூடிய பிராசஸர் கோர்களுக்கான தேவை அதிகமாகி இருக்கிறது. சண்டிகரில் உள்ள எஸ்.சி.எல். 180 என்.எம். ஃபேப்ரிகேஷன் அமைப்பில் மிகமுக்கிய கோர்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும்” என தெரிவித்தார்.