டெல்லி:   நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் புதிய கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான தர வரிசை பட்டியலில்  சென்னை ஐ.ஐ.டி.க்கு  மீண்டும் முதல் இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டும் முதலிடத்தை பிடித்த ஐஐடி சென்னை இந்த ஆண்டும் முதலிடத்தை 2வது முறையாக பிடித்து சாதனை படைத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய நிதி அளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள், தனியார் அல்லது சுயநிதி கல்லூரிகள், நிறுவனங்கள், தனியார் அல்லது சுயநிதி பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி, நிறுவனங்கள், மகளிர் உயர்கல்வி நிறுவனங்கள் என 6 பிரிவுகளின் கீழ் புதுமையான கண்டுபிடிப்பு சாதனைகள் குறித்த ஆய்வுகளின் படி,  கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் (ஏஆர்ஐஐஏ.) வெளியிடப்பட்டு வருகிறது.
நடப்பாண்டுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி காணொளி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், இணை மந்திரி சஞ்சய் தோத்ரே, உயர்கல்வித் துறை செயலாளர் அமித் காரே, அகில இந்திய தொழில்நுட்பகல்வி கவுன்சிலின் தலைவர் அனில் சஹஸ்ரபுதே, தரவரிசை பட்டியலை மதிப்பீடு செய்யும் குழுவின் தலைவர் பி.வி.ஆர்.மோகன் ரெட்டி, கல்வி அமைச்சகத்தின் தலைமை கண்டுபிடிப்பு அதிகாரி அபே ஜெரி, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்ட நிலையில், சிறப்பு விருந்தினராக  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு பட்டியலை வெளியிட்டார்.