இந்த வருடம் ஐ.ஐ.டி யிலிருந்து பட்டம் பெற்று தேர்ச்சி பெறும் மூன்றில் ஒரு பொறியியல் மாணவருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் திறமைவாய்ந்த மாணவர்கள் படிக்கும் 17 ஐ.ஐ.டி. வளாக நேர்முகத் தேர்வுகளில் மாணவர்களுக்குரிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை அல்லது வேலை பெரும் தகுதியை அவர்கள் பெறவில்லையென மத்திய அரசின் அதிகாரப் பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்குச் சமர்ப்பிக்கப் பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், 2016-2017ல் வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்துக்கொண்ட 9107 மாணவர்களில் 6013 மாணவர்கள் மட்டுமே வேலை கிடைத்துள்ளது. இது வெறும் 66 சதவிகிதமாகும். கடந்த ஆண்டு(2015-2016) வேலைவாய்ப்பு விகிதம் 79% ஆக இருந்து குறிப்பிடத் தக்கது. அதற்கு முந்தைய ஆண்டு 78% ஆக இருந்து.

IIT
இந்தியாவில் மொத்தம் 23 ஐஐடி-க்கள் உள்ளன. அதில் 17 ஐஐடி-க்கள் மட்டுமே தகவலைச் சமர்ப்பித்துள்ளன. மீதமுள்ள ஐந்து ஐஐடி-க்கள் வேலைவாய்ப்பின்மையைச் சேர்த்தால், இந்தச் சதவிகிதம் இன்னும் குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

இதுகுறித்து மனிதவளமேன்பாட்டுத் துறை அளித்துள்ள விளக்கத்தில், “மத்திய அரசு நிறுவனங்கள் “முதுநிலைப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு GATE) மதிப்பெண் அடிப்படையில் வேலைக்கு ஆள் எடுப்பது அதிகரித்துள்ளது. இவ்வாறு வேலைக்குச் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை இந்த வளாக வேலைவாய்ப்பு கணக்கில் வராது. எனவே, இவ்வாறு மாணவர்கள் மற்ற முறைகளில் வேலைக்குச் செல்வதையும் கவனட்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.
அரசு சப்பைக்கட்டு கட்டினாலும் கள நிலவரம் வேறு மாதிரி உள்ளது.
முன்யோசனையின்றி பிரதமர் நரேந்திர மோடி அரசு கொண்டுவந்த 1000,2000 ரூபாய் மதிப்பிழக்க நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதித்துள்ளது. 2015-2016ஆம் ஆண்டு 7.9 சதவிகிதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2016-2017ல் 7.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இது உள்நாட்டு பொருளாதாரம் மட்டுமின்றி உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் பல்வேறு பொறியியல் தொழிலாளர்களை வேலையை விட்டு அனுப்பியுள்ளது.


எல்.அன்ட் டி (லார்சன் அண்ட் டர்போ) லிமிடட் நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரல்- செப்டம்பர் மாதங்களில் 14,000 பொறியாளர்களை “தகுதிமேம்பாடு” போதவில்லையெனக் காரணம் காட்டி வேலையைவிட்டு துரத்தியுள்ளது.
ரூபாய் (1000, 2000 ) பணமதிப்பிழக்கம் அறிவிக்கப் பட்டுப் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாகத் தயாரிப்பு மற்றும் கட்டுமான துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் நவம்பர் 2016- ஜனவரி 2017 காலத்தில் வேலைவாய்ப்பை வெகுவாகக் குறைத்துவிட்டன. பொறியாளர்கள் மட்டுமின்றி, கூலித் தொழிலாளர்களும் வேலையை இழந்து பீகார், உத்திரப் பிரதேசம், அசாம் மாநிலத்திற்கு சாரைசாரையாய் இரயில்களில் பயணித்ததை ஊடகங்கள் செய்தியாய் வெளியிட்டது நினைவுக்கூரத் தக்கது.
அமெரிக்காவில் டிரம்ப் பதவியேற்றது முதல், தகவல் தொழிற்நுட்பம் (ஐ.டி.) உள்ளிட்ட பல்வேறு சேவைத்தொழில் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு வெகுவாய் பாதிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவின் ஏழு பெரும் தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்கள் 56,000 பொறியாளர்களை வேலையைவிட்டு நீக்கத் திட்டமிட்டுள்ளது.

ஐஐடி ரூர்க்கி பேராசிரியர், என்.பி.பாண்டே ஹிந்துஸ்தான் நாளிதளுக்கு அளித்துள்ள பேட்டியில், “ஐஐடி களின் எண்ணிக்கை 17ல் இருந்து 25 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், வேலைவாய்ப்பு அதிகரிக்க வில்லை. எனவே, இருக்கும் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அனைத்து ஐஐடி களுக்கும் பகிர்ந்துகொள்ளப் படுவதால் வேலைவாய்ப்பு சதவிகிதம் குறைந்துள்ளது. ஸ்டார்ட்-அப் எனப்படும் புதிய சிறு நிறுவனங்கள் பணமதிப்பிழக்கம் காரணமாக இந்த ஆண்டு வளாகத் தேர்வுகளில் கலந்துக் கொள்ளவில்லை. பல்வேறு மாணவர்கள் மேல்படிப்பிற்காகச் செல்கின்றனர். எங்கள் ஐஐடியில் 974 மாணவர்களில் 653 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இது 67 சதவிகிதம் ஆகும். கடந்த ஆண்டைவிட 16% குறைவு ( கடந்த ஆண்டு 83%) ” என்றார்.
இந்திய ஐஐடிகளின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை ஐஐடியின் நிலைமை கொஞ்சம் தேவலாம். இந்தவருடம் வேலைக்காகப் பதிவு செய்துக் கொண்ட 665 மாணவர்களில் 521 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த மாணவர்களுக்குச் சராசரியாய் ஆண்டுவருமானம் 13 லட்சம் ஆகும். எனினும் இது 78 சதவிகிதம் ஆகும். கடந்த ஆண்டு 86 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில் இது 8 சதவிகிதம் குறைவாகும்.
“பொதுவாய் சென்னை ஐஐடியின் வளாகத் தேர்வுகள் டிசம்பரில் நடக்கும். ஆனால், டிசம்பரில் வர்தா புயலில் சீற்றத்தினால் வேலைவாய்ப்புத் தேர்வுகள் பாதிக்கப்பட்டது அதனால் சிறு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். “ என்றார் சென்னை ஐஐடியின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி.
பொதுவாய் ஐஐடிகளில் வளாக நேர்முகத் தேர்வுகள் டிசம்பர்- பிப்ரவரி மாதங்களில்பெரும்பாலும் முடிந்துவிடும். ஜுன் வரை அது தொடர்ந்தாலும், எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இருக்காது.

ஐஐடி போன்ற கல்வி  நிறுவனங்களில் முன்னாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிதி இரானியின் துணையுடன் ஆர்.எஸ்.எஸ். , ஏ.பிவி.பி. தலையீடு, முற்போக்கு மாணவர்களின் உரிமைகள் நசுக்கப் படுவது என மோடி அரசு கவனம் செலுத்தியது மட்டுமில்லாமல், எந்தவித திட்டமிடலுமின்றி, அவசரகதியில் 1000,2000 பண மதிப்பிழக்கத்தை அறிமுகப் படுத்தியது ஐஐடி வளாகவேலைவாய்ப்புகளையும் பாதித்துள்ளது. ஆனால், இந்த உண்மைகளை மறைத்து மோடி அரசு பணமதிப்பிழக்கம் வெற்றியென வெற்றுக்கூச்சலிடுகின்றது. அதனைப் பல அடிமை ஊடகங்களும் தாங்கிப்பிடித்துக் கொண்டுள்ளது கவலையளிக்கின்றது.
மாணவர்கள் எதிர்காலம் மட்டுமின்றி இந்தியர்களின் எதிர்காலம் கருதி இந்திய அரசு பொருளாதார மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால் இந்திய அரசோ பசு மாடுகள் பாதுகாப்பு குறித்து தினம் ஒரு சட்டமியற்றுவதில் கவனம் செலுத்தி வருகின்றது.