சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்: விசாரணையை தொடங்கியது சிபிஐ

சென்னை:

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் என்பவர் சென்னை ஐஐடியில் படித்து வந்தார். இவர்  கடந்த மாதம் 9-ம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில், தனது தூக்குக்கு, கல்லூரி பேராசியர்களே காரணம் என கூறியிருந்தார்.

தொடக்கத்தில் இது தற்கொலை என வழக்கு பதியப்பட்ட நிலையில், மாணவியின் தந்தை கொடுத்த அழுத்தம் மற்றும் ஆதாரங்கள் காரணமாக, சந்தேக மரணம் என வழக்கு கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் பதியப்பட்டது.  பின்னர், இந்த வழக்கு மத்தியக் குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், பின்னர் சிபிஐக்கு மாற்ற தமிழகஅரசு பரிந்துரை செய்திருந்தது.

இதையடுத்து வழக்கை விசாரணைக்கு ஏற்ற சிபிஐ, முதல்கட்ட விசாரணையை இன்று  தொடங்கி உள்ளது.  தற்கொலை செய்துகொண்ட பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் நாளை சென்னை வர உள்ளதாகவும், சிபிஐ அதிகாரிகளை சந்தித்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதம் அளிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.