டில்லி

ஐடியில் இந்த வருடம் நிறைய காலி இடங்கள் உள்ளதால், மானவர்களிடையே பிரபலமற்ற படிப்புக்களை நீக்க திட்டமிட்டுள்ளது.

ஐஐடியில் மாணவர்கள் சேர போட்டி போட்ட காலம் மாறி சமீப வருடங்களாக காலி இடங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வருடம் 121 இடங்களுக்கு மாணவர்கள் சேர விரும்பவில்லை.  இதே காலி ஆன இடங்கள் போன வருடம் 96 ஆகவும், 2015ஆம் வருடம் 50 ஆகவும், 2014ல் மூன்று ஆகவும் இருந்தன.

இதற்கான காரணம் சில படிப்புகள் இப்போது பிரபலமற்று இருப்பதால் அதில் சேர மாணவர்கள் விரும்பாததே என தெரிய வந்துள்ளது. பிரபலமில்லாத படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் மனித நல மேம்பாட்டு அமைச்சகம், அதிகம் மாணவர்கள் சேர விரும்பாத படிப்புக்களை நீக்குமாறு ஐஐடிக்கு யோசனை அளித்தது.  அந்த யோசனையின் படி ஐஐடி அவைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து ஐஐடி, மும்பையின் பேராசிரியர் பிரதிப்தா பானர்ஜி, “இப்போது சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாறுதலின் படி ஐஐடி ஆனாலும் தங்களுடைய எதிர்கால முன்னேற்றத்துக்கு பயன்படாத படிப்பு எனில் எந்த மாணவரும் படிக்க விரும்புவதில்லை.  அவர்கள் கேட்கும் துறையில் இடம் இல்லை எனில் கிடைத்த துறையில் சேருவது என்பது தற்போது மிகவும் குறைந்துள்ளது.” என்றார்.

அவர் கூறியது போலவே, வாரணாசி ஐஐடியில் பார்மசூட்டிகல் எஞ்ஜினீரிங் மற்றும் செராமிக் எஞ்ஜினீரிங் ஆகிய துறைகளில் மாணவர் சேரவில்லை.  இதே போல மற்ற ஐஐடிக்களிலும் குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் மாணவர்கள் சேர விரும்புவதில்லை.  பானர்ஜி அவ்வாறு உள்ள துறைகளை முழுமையாக நீக்குவதை விட இருக்கைகளை குறைக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.

மேலும் சில மாநிலங்களில், உள்ளூர் இட ஒதுக்கீட்டை அகில இந்திய அளவில் மாற்றினாலும் மாணவர் சேருவது அதிகரிக்கும் என மற்றொரு மூத்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது தெரிந்ததே.  தற்போது பொதுவான சேர்க்கைக்கு 75% மதிப்பெண்ணும், ஒதுக்கீடு சேர்க்கைக்கு 45% ஆக குறைக்கப்பட்டுள்ளது.  அதே போல் தேவையான மாணவர்கள் உள்ளூர் கோட்டாவில் சேரவில்லை எனில் அதை அகில இந்திய லெவலில் மாற்றவும் விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.