சென்னை

ங்களுக்கு பொதுச் சின்னம் வழங்கக் கோரி இந்திய ஜனநாயகக் கட்சி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஐஜேகே எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ஜனநாயகக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகியவை கூட்டணியாக களம் இறங்குகின்றன.    இவ்விரு கட்சிகளுக்கும் மநீம கட்சியின் தலைவர் கமலஹாசன் தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளார்.  இந்நிலையில் அக்கட்சி பொதுச் சின்னம் கோரி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது

ஐஜேகேவுக்கு 2011 சட்டமன்ற தேர்தலில் மோதிரம் சின்னமும், 2016 சட்டமன்ற தேர்தலில் கத்தரிக்கோல் சின்னமும் ஒதுக்கப்பட்ட நிலையில், வாக்காளர்கள் எளிதாகக் கண்டு வாக்களிக்க ஏதுவாக இருந்ததாக வழக்கு மனுவில் அக்கட்சித் தலைவர் ரவிபச்சமுத்து குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், தமிழகத்தில் 40 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 20 தொகுதிகளிலும் ஐ.ஜே.கே. போட்டியிடுவதாகவும், கடந்த தேர்தல்களைப் போல இந்த முறையும் பொதுச் சின்னம் ஒதுக்க வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அளித்த மனுவில், ஏழு கதிர்கள் கொண்ட பேனா முள் சின்னத்தை தங்களுக்கான பொது சின்னமாக ஒதுக்கக்கோரி மனு கொடுத்துள்ளதாகவும், ஆனால் அந்தச் சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கியிருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், அதற்குள் பொதுச்சின்னத்தை ஒதுக்க வேண்டும் என ஐஜேகே தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையொட்டி ஐஜேகே. வின் மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.