சென்னை :

ணையத்தில் கரோக்கே முறையில் பாடும் தளமான் ஸ்மூலில்,   இளையராஜா இசை அமைத்த பாடல்களை  பாடக்கூடாது என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இணயதள அப்ளிகேஷனில் ஒன்றான “ஸ்மூல்” என்னும் பாடல் தளத்தில்  அமெச்சூர் பாடகர்கள் தங்களின் பாடல்களை பாடி பதிவிட்டு வருகிறார்கள்.   அந்தப் பாடகர்கள் பெரும்பாலானவர்களின் விருப்பம் இளையராஜாவின் இசையில் வந்த பாடல்கள்தான்.  ஆனால் இளையராஜாவின் பாடல்கள்  அத்தளத்தில் இருந்து  தற்போது நீக்கப்பட்டுள்ளன.

இது குறித்து இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார், “ஒரு இசை அமைப்பாளரின் அனைத்து படைப்புக்கும் அவரே உரிமையாளர்.  இந்த தளத்தின் உரிமையாளர்கள் எங்களிடமிருந்து இதை இசையை உபயோகிக்க அனுமதி பெறவில்லை.  மேலும், இதைப் பற்றி இளையாராவிடம் தெரிவிக்கவும் இல்லை.  எனவே  இளையராஜாவின் பாடல்களை அந்தத் தளத்தில் இருந்து நீக்கச் சொல்லி விட்டோம்.  இந்த தளம் சிலரிடமிருந்து கட்டணம் வசூலிப்பதால் அவர்கள் இளையராஜாவின் 35 வருட உழைப்பை வைத்து பணம் சம்பாதித்து வருகின்றனர்.  இந்தியாவில் இசைக்கு வரவேற்பு இருப்பதை பயன்படுத்தி இளையராஜாவின் உழைப்பை சுரண்டுகின்றனர்” எனக் கூறி உள்ளார்.

மேலும் அந்த தளத்தில் கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட்டால் இளையராஜாவின் இசையை பயன்படுத்த தடை இல்லை என்றும்,  தாங்கள் வளரும் பாடகர்களுக்கு எதிரிகள் இல்லை எனவும் கூறி உள்ளார்.  இது குறித்து இளையராஜாவின் தர்ப்பில் இருந்து ஸ்மூல் தளத்துக்கு விளக்கம் கேட்டு ஈ மெயில் அனுப்பப்பட்டுள்ளது.  அதற்கு சரியான பதில் கிடைக்காவிடில் அவர்கள் மேல் சட்டபூர்வமாக வழக்கு பதியப்படும் என தெரிய வருகிறது.

இதற்கு முன்பே இளையராஜா, பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம், அவர் மகன் சரண்,  மற்றும் பாடகி சித்ரா ஆகியோர் அவர்களுடைய அமெரிக்க பயணத்தில் தன் பாடல்களை பாடக் கூடாது என தடை விதித்திருந்தார்.   அவர்களும் இளையராஜாவின் பாடல்களை அந்த நிகழ்ச்சிகளில் பாடவில்லை.  இதே போல் 2015ஆம் வருடம் அனத்து வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் தனது பாடலை தனது அனுமதியின்றி ஒலி/ஒளிபரப்பினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார்.

முன்பு ஒரு முறை இளையராஜா, “எனது பாடல்களுக்கான உரிமை என்னிடம் மட்டுமே உள்ளது.  நான் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் ஐந்து வருடங்களுக்குமே மட்டுமே செல்லுபடி ஆகும்.  மற்றபடி எனக்கு வரவேண்டிய ராயல்டியை தராததாலும், ஒப்பந்தங்களை புதிப்பிக்காததாலும் அந்த ஒப்பந்தங்கள் ரத்தாகி விட்டன” என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் தீவிர ரசிகரும் ஸ்மூல் இணையதளத்தில் அவ்வப்போது தனது குரல்வளத்தை வெளிப்படுத்துபவருமான  சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த சத்யாவிடம் இது குறித்து கேட்டோம்.

சத்யன்

அவர், “நான் ஸ்மூல் தளத்தில் இளையராஜாவின் பாடல்களை விரும்பிப்பாடுவேன். நான் மட்டுமல்ல.. பெரும்பாலோர் இளையராஜா இசை அமைத்த பாடல்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த நிலையில் அவரது பாடல்களுக்குத் தடை என்பதை ஏற்க முடியவில்லை.

இந்த தளத்தில் பாடுபவர்கள் பெரிய பாடகர்கள் கிடையாது. இந்த பதிவை பணத்துக்கு விற்பனை செய்வதுவோ கிடையாது.  அவரவர் மன திருப்திக்காக பாடி வருகின்றனர்.  ஆனால் சில பாடல்களை தான் மட்டும் பாடவோ, அல்லது கணக்கற்ற பாடல்களை பாடவோ வேண்டும் என்றாலோ இந்த தளம் மாதம் ரூ.110 அல்லது வருடத்துக்கு ரூ.1100 கட்டணம் வசூலிக்கிறது. . இதில் இளையராஜாவுக்கு ஒரு பகுதியைக் கொடுத்து இந்தத் தடையை நீக்க வேண்டும் என்பதுதான் என் போன்ற இளையாராஜா ரசிகர்களின் வேண்டுகோள்.

தவிர, ஒரு பாடலில் இசை அமைப்பாளருக்கு மட்டும்தான் உரிமையா… பாடகர்கள், பின்னணி இசைப்பவர்கள், பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்களுக்கு எந்த உரிமையும் இல்லையா.. என்பது தெரியவில்லை” என்றார்.