சென்னை:

மிழகத்தை உலுக்கிய தருமபுரி இளவரசன் மரணம் தற்கொலை தான் என்றும் இது குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளத்துள்ளது.

தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த தலித் இளைஞர் இளவரசனும் செல்லன்கொட்டாய்  பகுதியைச் சேர்ந்த பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திவ்யாவும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டார். அவரது பிரேதத்தை எடுத்துச்செல்லும்போது கலவரம் வெடித்து, நத்தம்காலனியில் உள்ள வீடுகள் தாக்கப்பட்டன. இது தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையே  திவ்யாவின் தாயார் தனது மகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி ஆட்கொணர்வு மனு அளித்தார். இந்த வழக்கில் ஆஜரான திவ்யா, தான் தனது தாயாருடன் செல்வதாக 2013 ஜூலை 3ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கு மறுநாள், (ஜூலை 4ம் தேதி)  நண்பகலில், இளவரசன் தர்மபுரி அரசு கலைக் கல்லூரிக்குப் பின் உள்ள இருப்புப் பாதையில் பிணமாகக் கிடந்தார்.

அவர் கொலை செய்யப்பட்டதாக  அவரது குடும்பத்தினரும், தலித் அமைப்புகள் சிலவும் தெரிவித்தன. இது குறித்து நீதிமன்றங்களையும் நாடின.  இதனால் இளவரசனின் உடல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அவர்  தற்கொலை செய்துகொண்டதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன. அந்த நேரத்தில் அவர் மது அருந்தியிருந்ததாவும் ஆய்வறிக்கைகள் தெரிவித்தன.

இந்த நிலையில் இளவரசன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்றும் அவரது மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி  அவரது தந்தை இளங்கோ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கிடைய, வழக்கை விசாரித்து வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், “இளவரசன் தற்கொலை செய்துகொண்டார்” என அறிக்கை அளித்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற , சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.