இளையராஜா இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறுமா? தயாரிப்பாளர் சங்கத்துக்கு நீதிமன்றம் கேள்வி

--

சென்னை:

ளையராஜா நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தயாரிப்பாளர் சங்கம் ஏன் ஒத்திவைக்க கூடாது?  என்று கேள்வி எழுப்பிய நீதி மன்றம், நிகழ்ச்சிக்கான செலவு கணக்கை நாளை மறுதினம் தாக்கல் செய்யக்கூறி வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘இளையராஜா 75′ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகினற்ன. அதன்படி,  பிப்ரவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் இந்த  விழா நடைபெறுகிறது.

இந்த நிலையில், இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  தயாரிப்பாளர் ஜெ. சதீஷ் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில்,  ‘இளையாராஜா 75’ இசை நிகழ்ச்சி நடத்த ரூ. 7 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் எனக்கூறி சங்கத்தின் பணம் ரூ.1 கோடி செலவிடப்பட்டுள்ளது. எனவே, நிகழ்ச்சி நடைபெறு வதற்கு முன்னதாகவே தயாரிப்பாளர் சங்க வங்கிக் கணக்கில் 7 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் ‘இளையராஜா 75’ இசை நிகழ்ச்சியை நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும்  கோரப்பட்டிருந்தது

இந்த மனுமீதான விசாரணை கடந்த 22ந்தேதி நடைபெற்றபோது, இதுகுறித்து விளக்கம் அளிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு  28ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  கல்யாணசுந்தரம், இளையராஜா- 75 என்ற பாராட்டு நிகழ்ச்சியை தயாரிப்பாளர் சங்கம் ஏன் ஒத்திவைக்க கூடாது?   என்று  தயாரிப்பாளர் சங்கத்திற்கு கேள்வி எழுப்பினார். மேலும்,  நிகழ்ச்சிக்கான செலவு கணக்கை நாளை மறுதினம் தாக்கல் செய்ய தயாரிப்பாளர் சங்கத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.