இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் 1976-ம் ஆண்டு முதல் தனது படங்களுக்கு இசையமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில், பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பான வழக்கு சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள தன் பொருட்களை எடுத்துக்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் எனவும், தியானம் செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் இளையராஜா வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இளையராஜாவை அனுமதிக்க முடியாது அவர் பிரதிநிதிகள் வந்து பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்றும் பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

பொருட்களை எடுக்க வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிப்பதாகவும், அவருடன் இளையராஜா, பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்கள், இருதரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் செல்லலாம் என்றும் யோசனை தெரிவித்ததுடன், இதுகுறித்து இரு தரப்பும் நாளை விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு அனுமதிக்கும் பட்சத்தில் இழப்பீடு கோரிக்கையை வலியுறுத்த வேண்டாமென இளையராஜாவிற்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.