சென்னை:

சென்னையில் நடைபெற உள்ள இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், தயாரிப்பாளர் சங்கம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில்,  நலிந்த தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க நிதி திரட்டும் வகையில் இளையராஜாவின் இசை கச்சேரி பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இளைய ராஜா இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் நிகழ்ச்சி மூலம் ரூ.10 கோடி நிதி திரட்ட பட அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விழாவில் கலந்துகொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நடிகர்கள் விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜீவா, விஜயகுமார், ஆனந்தராஜ், டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், விக்ரமன் மற்றும் நடிகைகள் ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருக்கு நேரில் அழைப்பிதழ் கொடுத்து உள்ளனர். தொடர்ந்து திரையுலகினருக்கு அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி நடிகர்களையும் அழைக்க உள்ளனர். விழாவையொட்டி பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய 2 நாட்களும் அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சதிஷ்குமார் என்பவர்,  இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல்  செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடை பெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக  வரும்  28-ம் தேதிக்குள் பதில் அளிக்க தயாரிப்பாளர் சங்கத்திற்கு  நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.