160 பெட்டிகள், 7 பீரோ உள்பட பிரசாத் ஸ்டூடியோவில் இருந்த இளையராஜாவின் பொருட்கள் 2 லாரிகளில் ஏற்றிச்செல்லப்பட்டது…

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் உள்ள  பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இளையராஜாவின் அறைகள் காலி செய்யப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் அனைத்தும், 160 பெட்டிகளிலும்,  7 பீரோக்களில் அடைக்கப்பட்டு 2 லாரிகளில் ஏற்றிச்செல்லப்பட்டது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் 40 ஆண்டுகளாக இசைஞானி இளையராஜா இசை அமைத்து வந்தார். அவருக்கு அங்கு 5 அறைகள் இருந்தன. அவரது அறைகளை காலி செய்ய பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் கடந்த ஆண்டு வலியுறுத்தியது. ஆனால், இளையராஜா காலி செய்ய  மறுத்துவந்த நிலையில் இந்த விவகாரம் நீதிமன்றம் எடுத்துச் செல்லப்பட்டு கடந்து ஒன்றரை வருடமாக வழக்கு நடந்து வந்தது.  பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டு ரிக்கார்டிங்  தியேட்டரில் இளையராஜா  டிசம்பர் 28ந்தேதி அன்று ஒரு நாள் தியானம் செய்யுவும்  அவருக்கு சொந்தமான பொருட்களை எடுத்து செல்லவும் ஸ்டூடியோ நிர்வாகம் அனுமதி  வழங்கியது. ஆனால் அவர் வரவில்லை. ஸ்டூடியோவில் இளையராஜா பயன்படுத்திய அறை  தகர்க்கப்பட்டு இருப்பதாக அவரது வழக்கறிஞர் புகாரி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட பட்டியலில் உள்ள பொருட்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா, அவற்றிற்கு சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளனவா என்பனவற்றை எல்லாம் சரிபார்க்கும் பணி நேற்று காலை முதல் நடைபெற்றது. சுமார் 7 மணி நேரம் இதற்கான பணிகள் நடைபெற்றது.  இளையராஜாவிற்கு சொந்தமான பத்ம விபூஷன், கைகளால் எழுதப்பட்ட இசைக்குறிப்புகள், இசை கருவிகள் உட்பட  அனைத்து  பொருட்களும் 160 பெட்டிகள், 7 பீரோக்களில் வைக்கப்பட்டு, இளையராஜா தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து, கூறிய பிரசாத் ஸ்டூடியோ தரப்பு வழக்கறிஞர்கள் சலீம் மற்றும் இளம்பராதி ,  “இளையராஜாவிடம் அவர் தரப்பில் வந்தவர்கள் அவருக்கு சரியான தகவலை தெரிவிக்கவில்லை. இளையராஜா இருந்த தனி அறை IT ரூமாக மாற்றப்பட்டது. இதனை நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளோம்” . “நேற்று மாலை 4 மணி வரை இளையராஜா வருவார் என காத்திருந்தோம். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என அவரது சார்பில் வந்திருந்த சுதாகர், பரணிதரன், சண்முக வேல் ஆகியோர் தெரிவித்தனர். அதனால் நீதிமன்றம் சார்பில் நியமிக்கப்பட்ட ஆணையர்கள் முன்னிலையில் அனைத்தும் சரிபார்த்து கொடுக்கப்பட்டது. பத்ம விபூஷன் உட்பட அனைத்து பொருட்களும் பாதுகாப்புடன் பேக் செய்யப்பட்டு அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது. இளையராஜா சார்பில் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்பட்டது. அதனால் இந்த பிரச்சனை சுமூகமாக முடிக்கப்பட்டது” என்றும் கூறினர்.