தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்: கமல் மீண்டும் அறிவிப்பு  

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என்று நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல் மீண்டும் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் தெரிவித்ததாவது:

“பெட்ரோல் டீசல் விலையை சிறிது சிறிதாக நீண்ட நாட்களாக ஏற்றிவிட்டு கொஞ்சமாக குறைப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. இன்னமும் விலை ஏறிக்கொண்டு இருக்கிறது என்பதுதான் அதன் அர்த்தம். அது குறைக்கத்தான்படவேண்டும். பெட்ரோல் டீசல் பயன்பாட்டாளர்களை விலையேற்றம் பதற்றப்பட வைக்கிறது. இது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விலை ஏற்றம்” என்றார்.

தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்..

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக கூறியிருக்கிறாரே?

தம்பிக்கு ஆர்வம் இருந்தால் வரட்டும்.

உங்கள் பாணியில் ஊழலை ஒழிப்பேன் என்று விஜய்யும் சொல்கிறாரே?

அது நல்ல பாணிதானே.

விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா?

கண்டிப்பாக வரவேற்பேன். அவர் கூறியபடி ஊழலுக்கு எதிராக என்பதை ஊர்ஜிதப்படுத்திவிட்டால் கண்டிப்பாக சகோதர மனப்பான்மையுடன் வரவேற்பேன்.

உங்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கிராமசபையினால் ஏற்பட்ட தாக்கம் என்ன?

நல்ல கேள்வி, கேள்வியே எங்களுக்கு தேவையானது. கிராமசபையின் சக்கரம் தரையில் அழுத்தமாக பதியவைக்கப்பட்டு இருக்கிறது. சுமார் ஆறு அல்லது ஏழாயிரம் அளவுக்கு தொட்டுக்கொண்டிருக்கிறோம். அதை 12,533 அளவில் கொண்டுச்செல்லவேண்டும்.

அதை செய்துவிட்டால் அனைவருக்கும் தெரியக்கூடிய மாற்றத்தை செய்ய இயலும். ஏனென்றால் சட்டமன்றத்திற்கு இணையான அளவு பலம் கொண்டது கிராம சபை. அதை மக்களும் நம்புவது அவசியம். .

பலவித எதிர்ப்புக்களிடையே மூன்று ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதே?

பிரச்சினையே அதுதான், இதைத்தான் ஸ்டெர்லைட் விவகாரத்திலும் சொல்கிறோம். யாரிடம் ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளது? மக்கள் இருக்கக்கூடிய இடத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய இடத்தில் மக்களிடம்தானே பேச வேண்டும். அதைவிடுத்து எங்கோ அலுவலகத்தில் பேப்பரை நகர்த்துவது எப்படி சரியாக இருக்க முடியும்?.

தேர்தல் வந்தால் பூத் கமிட்டி அமைக்கும் அளவுக்கு தொண்டர்கள் உங்களிடம் இல்லை என்று  சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறர்களே?

அவர்களுக்கெல்லாம் பதில் அந்த கமிட்டி இயங்கும்போது தெரியும். நாங்கள் அழுத்தமாக மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்த்துக்கொண்டிருக்கிறோம். பணத்தைக்கொடுத்து சரி செய்ய வேண்டும் என்கிற நிலையை தவிர்க்கிறோம்.

வானலை ஆய்வு மையம், 7-ம் தேதி ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அரசு என்ன மாதிரி ஏற்பாடுகளை செய்ய வேண்டும்?

முன்பு எடுத்ததுபோல் இல்லாமல் நல்ல முறையில் ஏற்பாடு செய்யவேண்டும்.

–    இவ்வாறு கமல் பதில் அளித்தார்.

கடந்த ஜூன் மாதம் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த கமல், அப்போதும், “தம்பி விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.