முறைதவறிய காதல்: சேலத்தில் பெண் மீது திராவகம் வீச்சு

முறைதவறிய காதலால் சேலத்தில் பெண் மீது திராவகம் வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் குகை லோகுசெட்டி தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். கார் ஓட்டுநரான இவரது மனைவி காயத்ரி (வயு 31). இருவரும் 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட  இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.

காயத்ரி, அன்னதானப்பட்டியில் உள்ள ஒரு மர அறுவை மில்லில் கணக்காளறாக பணியாற்றுகிறார். இந்த நிலையில் அந்த மில்லில் வேலை செய்து வந்த சீனிவாசன் (வயது 40) என்பவருக்கும் காயத்திரிக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.

இதை அறிந்த காயத்ரியின் கணவர் பாலமுருகன், சீனிவாசனுடனான நெருக்கத்தை கைவிடுமாறு வற்புறுத்தினார்.  ஆனாலும் சீனுவசானுடனான காயத்ரியின் நெருக்கம் தொடர்ந்தது.

இதனால் பாலமுருகன் – காயத்ரி தம்பதியிடையே அடிக்கடி பிரச்சினை வெடித்தது.

இந்தநிலையில் காயத்ரி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு குகை பகுதியில் உள்ள தனது தாயார் இந்திராணி வீட்டுக்கு ஐந்து மாதங்களுக்கு முன் சென்றுவிட்டார்.  சீனிவாசனுடன் பேசுவதையும் தவிர்த்தார். ஆனால் சீனிவாசன் காயத்ரியை சந்தித்து, தன்னுடன் பழையபடி பேசுமாறு வற்புறுத்தி வந்தார். இதற்கு காயத்ரி மறுத்தார்.

இந்நிலையில்,  நேற்று காலை காயத்ரி குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு   தாயார் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சீனிவாசன், தன்னுடன் பேசுமாறு மீண்டும் காயத்ரியை வற்புறுத்தினார். காயத்ரி மீண்டும் மறுத்தார்.

உடனே தான் பாட்டிலில் மறைத்துவைத்திருந்த திராவகத்தை காயத்ரி மீது வீசிவிட்டு சீனிவாசன் தப்பி ஓடிவிட்டார்.

திராவக வீச்சால் காயத்ரியின் தோள்பட்டை, மார்பு, கால், முகத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. அங்கிருந்தவர்கள் காயத்ரியை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திராவகம் வீசி தப்பிச் சென்ற சீனுவாசனை செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றன.

பட்டப்பகலில் இரண்டு குழந்தைகளின் தாய் மீது திராவகம் வீசப்பட்ட சம்பவம் சேலம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.