சென்னை,

வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றதாக வழக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா  நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா மீது சிபிஐ 2011ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கிலும் அவரின் தண்டனையை  ஜுன் 16ந்தேதி கோர்ட்டு மீண்டும் உறுதி செய்தது.

அதையடுத்து,  சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரியும், பிணையில் விடுவிக்கக் கோரியும், ரம்ஜான் பண்டிகை முடியும் வரை சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜவாஹிருல்லா மூன்று மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், மனுதாரர் ரம்ஜான் நோன்பு கடைப்பிடிப்பதால், அவருக்கு (ஜவாஹிருல்லா) ஜூன் 29-ஆம் தேதி வரை சரணடைவதில் இருந்து தற்காலிகமாக விலக்கு அளித்து, வழக்கு விசாரணையை ஜூன் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜவாஹிருள்ள சரணடைய வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதையடுத்து  ஜவாஹிருல்லா உள்ளிட்ட 5 பேர் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.