கொல்கத்தா : சட்டவிரோதமாக விற்கப்பட இருந்த 550 அரியவகை பறவைகள் மீட்பு

கொல்கத்தா

விற்பனைக்காக சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 550 அரியவகை பறவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் காணப்படும் பல அரியவகை பறவைகளும் விலங்குகளும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் என்னும் பிரிவின் கீழ் வருகின்றன.   இவைகளை பிடிப்பது மற்றும் விற்பனை செய்வது சட்ட விரோதமாகும்.    இந்த  அரியவகை  பறவைகளை வெளிநாட்டினர் வாங்கிச் சென்று வளர்த்து வருகின்றனர்.   அவற்றை மேற்கு வங்கத்தில் சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.

இதை ஒட்டி கொல்கத்தா மத்திய பகுதியில் உள்ள காலிஃப் தெருவில் வனவிலங்குகள் தொடர்பான குற்றப்பிரிவு துறை தொடர்ந்து இரு சோதனைகளை நிகழ்த்தின.   அவர்களுடன் மேற்கு வங்க வனத்துறை துணை இயக்குனர் அக்னி மித்ராவும் சோதனையில் ஈடுபட்டார்.   இந்த சோதனை அந்த தெருவில் உள்ள வளர்ப்பு பிராணிகள் விற்கும் கடைகளில் நடத்தப்பட்டது.

முதல் கட்ட சோதனையின் போது சுமார் 250 அரிய வகை பறவைகள் தங்களது குஞ்சுகளுடன் வலைக்கூடுகளில் அடைக்கப்பட்டு பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.   இந்த பறவைகளை அடைத்து வைத்திருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.   அப்போது மேலும் சில பறவைகளும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்தன.

அதை ஒட்டி இரண்டாம் கட்ட சோதனைகள் நடத்தப்பட்டன.   இந்த சோதனையில் போது மேலும் 300 அரியவகை பறவைகளும் சிறு குஞ்சுகளும் மீட்கப்பட்டுள்ளன.   இம்முறை மேலும் 9 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.    மீட்கப்பட்ட பறவைகள் சுகாதாரமற்ற நிலையில் அடைக்கப்பட்டிருந்ததால்  மருத்துவர்கள் அவற்றுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சோதனையின் போது பிடிபட்ட வியாபாரிகள் 18-32 வயதுடைய இளைஞர்கள் ஆவார்கள்.    இவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இன்று மதியம் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.