சட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கு: மாறன் பிரதர்ஸ் ஆஜராக கோர்ட்டு உத்தரவு

சென்னை:

ட்டவிரோத தொலைபேசி இணைப்பு வழக்கின் விசாரணைக்கு  மாறன் பிரதர்ஸ் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சன் குரூப் தலைவர் கலாநிதி மாறன், அவரது சகோதரர் தயாதி மாறன் உள்பட  குற்றம் சாட்டப்பட்டவர்கள் 7 பேரும் ஜனவரி 30ந்தேதி விசாரணைக்கு  நேரில் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டு உள்ளார்.

மத்திய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின்போது, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் இருந்த போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சன் தொலைக்காட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல் மூலம் 700க்கும் மேற்பட்ட அதிவேக தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாடடு எழுந்தது.

இந்த வழக்கில்  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி சி.பி.ஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதை ரத்து செய்ய கோரி மாறன் பிரதர்ஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதி மன்றம் விசாரணையை எதிர்கொள்ளுமாறு உத்தரவிட்டது.

ஆனால், மாறன் பிரதர்ஸ் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த உச்சநீதி மன்றம்,  ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதுவரை நடைபெற்ற விசாரணைகளின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாமல் தவிர்த்து வந்ததால் வழக்கின் விசாரணை தள்ளிக்கொண்டே போனது. இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர். வசந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிபிஐ தரப்பு வழக்கறிஞர்,   குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அனைத்து ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் இருப்பதால், அதை  நீதிபதி கருத்தில் கொண்டு, மனுதாரர்கள் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்றும் கூறினார்.

இதையடுத்து, வழக்கின்  விசாரணையை  வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்பட  7 பேரும் நேரில் ஆஜராக வேண்டும்  என்று உத்தரவிட்டார்.