சட்டவிரோத குடியேற்றம்: அமெரிக்காவில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தடுப்பு மையங்களில் அடைப்பு

வாஷிங்டன்:

மெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து இந்தியர்கள் உள்பட வெளி நாட்டை சேர்ந்தவர்களுக்கு கடுமையான தலைவலி ஆரம்பித்து உள்ளது.

சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைய முயற்சி செய்தாக 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு,  தடுப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில்,   அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை எனக் கூறிவரும்  அதிபர் டிரம்ப், வெளி நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர விசா நடைமுறைகளை கடுமையாக்கி உள்ளார். அது போல  சட்ட விரோதமாக தங்கள் நாட்டுக்குள் நுழையும் அகதிகளை தடுக்கவும் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பவும் திட்டமிட்டு உள்ளார்.

அமெரிக்காவில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய  குடியேற்றக் கொள்கையினால் அங்கு வசித்து வரும் இந்தியர்கள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றதாக 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பிடிபட்டுள்ளதாக அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இவர்களில் 52 பேர் மெக்ஸிகோவின் தென்அமெரிக்க மாநிலத்தில் உள்ள ஒரு தடுப்பு மையத்தில்  வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலோர் சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்று கூறி உள்ளனர்.

அதுபோல சட்டவிரோத குடியேற்றம் காரணமாக 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் கள் ஆந்திரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய உதவிடும் கும்பலுக்கு ஏராளமான அளவில் பணம்கொடுத்து வந்திருப்பதாகவும் கூறி உள்ளனர்.

தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள  இந்தியர்கள்

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கவும்,  அவர்களை மீட்கவும்  இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இந்திய தூதரக அதிகாரி ஒருவர்  ஒரேகான் நகரில் உள்ள முகாமுக்குச் சென்று விசாரித்ததாகவும், தொடர்ந்த மெக்ஸிகோவில் உள்ள  தடுப்பு முகாமிற்கு சென்று விசாரிக்க இருப்பதாகவும் இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.