சென்னை:

ண்ணாநகர் பகுதிகளில், திருட்டுத்தனமாக மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சிய 190 வீடுகளுக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளதாக  மெட்ரோ வாட்டர் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

சென்னையில் குடிநீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில், இரண்டு நாளைக்கு ஒரு முறை சுமார் 2 மணி நேரம் மட்டும் பல இடங்களில் குடிதண்ணீர் குழாய் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அண்ணாநகர் பகுதியில், சிலர் மின்மோட்டாகள் வைத்து தண்ணீரை உறிஞ்சி வருவ தாகவும்,  இதன் காரணமாக மற்றப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில்  தடங்கல் ஏற்பட்டு வருவ தாகவும் புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக குவிந்த ஏராளமான புகார்களை தொடர்ந்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் வீடுகளில்  அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அண்ணாநகர் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற சோதனையின்போது பலரது வீடுகளில், மெட்ரோ வாட்டர் குழாயில் மின் மோட்டார்கள் பொருத்தி தண்ணீரை உறிஞ்சி வந்த பலரது வீடுகளுக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஜூலை முதல் பாதியில் 31 வீடுகளுக்கு நீர் வழங்கலை மெட்ரோ வாட்டர் நிறுவனம்  நிறுத்தி உள்ளதாகவும், மேலும், 38 வீடுகளில் சட்டவிரோதமாக தண்ணீர் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதன் காரணமாக இந்த மாதம் (ஜூலை) 15ந்தேதி வரை 190 வீடுகளுக்கு நீர் வழங்கல் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும், இதுபோன்ற வீடுகளுக்கு ஒரு வருடத்திற்கு நீர் இணைப்பு வழங்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இதுபோன்ற விதிமீறல்கள் பிடிபட்ட வீடுகளுக்கு ரூ .10,000  அபராதமும், வணிக சொத்துக்களுக்கு ரூ .50,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

மேலும், இதுபோன்று அத்துமீறி தண்ணீர் எடுப்பவர்கள், அண்ணா நகர் பகுதியிலேயே அதிகம் இருப்பதாக தெரிவித்த அதிகாரிகள்,  தவிர, அம்பத்தூர், பெரம்பூர், திருவிக நகர், கோளத்தூர், பாடி, கோரட்டூர், எக்மோர் மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளிலும் தண்ணீர் திருட்டு கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

மோட்டார் வைத்து மெட்ரோ வாட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுவது குறித்து தகவல் தெரிந்தால்,   81449 13000 என்ற எண்ணில் மெட்ரோவாட்டர் மக்கள் தொடர்பு மேலாளரிடம் புகார் அளிக்கலாம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.