ராஜஸ்தான் : லவ் ஜிகாத் எதிர்ப்பு கொலையாளியின் கள்ளத் தொடர்பு அம்பலம்

ஜெய்ப்பூர்

வ் ஜிகாத் எதிர்ப்புக் கொலையாளியான சம்புலால் தனக்கும் ஒரு பெண்ணுக்கும் உள்ள கள்ளத் தொடர்பு  பற்றி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்கள் இந்துப் பெண்களை ஏமாற்றி மதம் மாற்றி திருமணம் செய்துக் கொள்வதற்கு லவ் ஜிகாத் என இந்துப் போராளிகள் பெயரிட்டுள்ளனர்.   சமீபத்தில் ராஜஸ்தான் மாநில ராஜ்சமந்த் அருகில் ஒரு இஸ்லாமியரை ஒருவர் அடித்துக் கொன்று தீயிட்டு கொளுத்தும் வீடியோ வெளியானது.   லவ் ஜிகாத் செய்பவர்களுக்கு இதுதான் முடிவு என அந்தக் கொலையாளி சொல்வதும் வீடியோவில் பதிவாகி இருந்தது.

ராஜ்சமந்த் பகுதி போலீசார் அந்தக் கொலையாளி சம்புலால் என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.   திருமணமான சம்புலால் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.    அவர் கைதான பிறகு அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.   அதில் சம்புலால் தனது மகளுடன் மேற்கு வங்கத்துக்கு யாருக்கும் தெரியாமல் ஓடி விட்டதாகவும்,  திரும்பி வந்த பின் அந்தப் பெண்ணை தனது குடும்பத்துக்கு தெரியாமல் தனியாக ஒரு வீட்டில் வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.   மேலும் சமுதாயத்தில் தனது பெயர் வெளிவந்தால் தனது குடும்பத்தின் நற்பெயர் கெடும் என்பதால் போலீசுக்கு செல்லவில்லை எனவும் கூறியிருந்தார்.

அதன் பிறகு சம்புலாலிடம் இந்தக் கோணத்தில் போலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.   விசாரணையில் சம்புலால், “அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் கடந்த 10 மாதங்களாக கள்ளத் தொடர்பு உள்ளது.   அந்தப் பெண் அதை வெளியே சொல்லிவிடுவதாக என்னை தொல்லை செய்து வந்தார்.   அதனால் இந்த விவகாரத்தை திசை திருப்ப நான் இந்தக் கொலையை செய்தேன்.   அதனால் கட்டிட காண்டிராக்டரான அஃப்ரஜுல் இடம் ஒரு நிலம் இருப்பதாகக் கூறி அழைத்து வந்து அடித்துக் கொன்றேன்.    அந்தக் கொலைக்கும் லவ் ஜிகாத்துக்கும் சம்மந்தம் இல்லை.   என்னை ஒரு பெரிய தாதாவாக காட்டிக் கொண்டால் இந்தக் கள்ளத் தொடர்பு விவகாரம் அமுங்கி விடும் என நினைத்து நான் இவ்வாறு செய்தேன்”  எனக் கூறி உள்ளார்.

இது குறித்து தகவல் அளித்த போலீசார் சம்புலாலின் மனைவி, பெற்றோர் மற்றும் அந்தப் பெண்ணின் தாயார் ஆகியோரிடமும் விசாரணை செய்துள்ளனர்.    அந்த விசாரணைகளும் வீடியோ பதிவாக்கப்பட்டுள்ளது.    விரைவில் அவைகள் நீதிமன்றத்தில் அளிக்கப்படும் என தெரிய வருகிறது.