நான் உயிருடன் தான் இருக்கிறேன், குளோனிங் செய்யப்படவில்லை: நைஜிரிய ஜனாதிபதி புஹாரி

நைஜீரியா:

தான் இறந்துவிட்டதாகவும், சூடானை சேர்ந்த ஒருவர் தனது உருவில் தற்போது பதவியில் நீடிப்பதாகவும் பல மாதங்களாக சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருக்கும் வதந்தியை குறித்து தற்போது நைஜிரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி பதிலளித்துள்ளார்.

கடந்த ஆண்டு, அவர் மருத்துவ சிகிச்சைக்காக பிரிட்டனில் 5 மாதங்கள் இருந்தார். ஆனால், அவருக்கு என்ன நோய் என்று இதுவரை வெளியிடப் படவில்லை.

புஹாரி, வரும் பிப்ரவரியில் மறு தேர்தலுக்குப் போட்டியிடுகிறார். இதற்கிடையில், தற்போது இருப்பது புஹாரியை போல் உருவம் கொண்ட சூடான் நாட்டின் ஜுபிரில் என்பவர், என்று அரசியல் எதிரிகளால் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்பட்டன.

இதுகுறித்து, எந்த ஆதாரமும் வழங்கப்படவில்லை. ஆனால் இதுபற்றிய வீடியோ கூற்றுக்கள் யூடியூப் மற்றும் ஃபேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான முறை பார்க்கப் பட்டு வருகிறது.

“இது உண்மையாகவே நான் தான், உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். விரைவில் எனது 76 வது பிறந்தநாளை கொண்டாடுவேன், நான் இன்னும் வலுவாக இருக்கிறேன்,” என்று புஹாரி போலந்தில் உள்ள ஒரு டவுன் ஹால் அமர்வில் நைஜீரியர்களிடம் கூறினார். அங்கு அவர் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டார்.

“உடல் நலமில்லாமல் நான் இறந்துவிட்டேன் என்று நிறைய பேர் நம்பினார்கள்,” என்று அவர் கூறினார். மேலும், வதந்தியைப் பரப்புபவர்கள், அறிவில்லாதவர்கள் என்றும் நம்பிக்கையற்றவர்கள் என்றும் கூறினார்.