கருணாநிதி உடல்நிலை சீராகி வருவதில் மகிழ்ச்சி: காவேரி வளாகத்தில் ராகுல்காந்தி தகவல்

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை வந்துள்ளார். காவேரி மருத்துவமனை வந்து கருணாநிதியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், கருணாநிதி உடல்நிலை சீராகி வருவதில் மகிழ்ச்சி என்று கூறினார்.

உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின்  உடல்நிலை குறித்து விசாரிக்க அகில இந்திய  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தார். அவருடன்  தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கும் சென்னை வந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்த ராகுல்காந்தி, அங்கு சுமார் 20 நிமிடங்கள் இருந்தார். அப்போது திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வருவதை கண்ட ராகுல், தொடர்ந்து ஸ்டாலின், கனிமொழி  உள்பட கருணாநிதி குடும்பத்தின ரையும் சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து கருணாநிதிக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்களிடம் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

காவேரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து  தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து காவேரி மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, கருணாநிதியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்றும் கூறினார்.

கருணாநிதி விரைவில் உடல்நலம் பெற சோனியா காந்தியும் வாழ்த்து தெரிவித்ததாக கூறிய ராகுல், திமுக தலைவர் கருணாநிதி மிகவும் உறுதியானவர் என்றார். கருணாநிதி இயல்பிலேயே போராட்ட குணமிக்கவர்.. விரைவில் அவர் குணமடைய வேண்டும்  என்றார்.

கருணாநிதியுடன் எங்களுக்கு நீண்ட கால நட்பு உள்ளது, நீண்ட நெடிய உறவு உள்ளது  என்று கூறிய ராகுல்காந்தி கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருவது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையம் வந்த ராகுல்காந்தி மற்றும் முகுல்வாஸ்னிக்கை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வரவேற்றார்.