சென்னை:

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. (சசிகலா அணி) சார்பாக அக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இவர்தான் போட்டியிடுவார் என்ற தகவலை கடந்த 10ம் தேதி  patrikai.com  இதழில் வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில்  தற்போது செய்தியாளர்களை டி.டிவி. தினகரன் சந்தித்துவருகிறார்.

மக்கள் நலக்கூட்டணி, அருமைப் பெரியவர் வைகோ, கேப்டன் விஜகாந்த், காங்கிரஸ்.. ஏன்.. பாஜகவும்கூட எங்களை ஆதிரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை தி.மு.க.தான் முதல் எதிரி. அதைத் தோற்கடிப்பதே எங்கள் லட்சியம்” என்றார்.

மேலும், “இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன். ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்றார்.

ஆர்.கே.நகரில் போட்டியிடுவதன் மூலம் முதல்வர் பதவியைக் குறிவைக்கிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, “அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி புரிந்துவருகிறார். அவர்தான் முதல்வர். எனக்கு அந்த விருப்பம் இல்லை” என்றார்.

கட்சி, ஆட்சி தலைமை இரண்டும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் ஏற்கெனவே சொல்லப்பட்டதே என்ற கேள்விக்கு, “அப்போதைய சூழலில் அப்படி ஒரு கருத்து நிலவியது. தற்போதைய சூழலில் அது பொருந்தாது” என்று தினகரன் தெரிவித்தார்.