ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்!: மு.க.அழகிரி

மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார் என்று மு.க.அழகிரி தெரிவித்திருக்கிறார்.
“என்னை திமுகவில் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று தெரிவித்து வருகிறார்   மு.க.அழகிரி. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த இருக்கிறார். இதில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என மு.க.அழகிரி தெரிவித்து வந்தார்.

மேலும் கடந்த பல நாட்களாக,  தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “திமுகவை காப்பாற்றவே எங்களை திமுகவில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். என்னை கட்சியில் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார். கட்சியில் இணைய நான் தயாராக இருந்தாலும், அவர்கள் தயாராக இல்லை. 1200 பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே திமுக இல்லை. லட்சக்கணக்கான தொண்டர்கள் என் பக்கம்தான் இருக்கின்றனர். எனது மகன் தயாநிதிக்கு திமுகவில் எந்த பொறுப்பையும் கேட்கவில்லை” என்று அழகிரி தெரிவித்தார்.