கொரோனாவிலிருந்து மீண்ட செவிலியர் மீண்டும் மருத்துவ சேவையாற்ற விருப்பம்…

திருவனந்தபுரம்

கேரள மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வந்த மூத்த தம்பதியரை பராமரித்து வந்த செவிலியருக்கும் COVID-19 கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது குணமடைந்துள்ள அவர் மீண்டும்  பணியாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது…

சில நாட்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த 93 வயது முதியவர் தாமஸ், அவருடைய மனைவி மரியம்மே(88) இருவரும் கொரோனாவிலிருந்து மீண்ட செய்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.இந்நிலையில் அவர்களை கண்காணித்து வந்த செவிலியர் ரேஷ்மா மோகன்தாஸுக்கு கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டது.

தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ள அவர் மருத்துவ ஆலோசனைப்படி இரண்டு வாரங்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். முழுமையாக நலமடைந்து மீண்டும் மருத்துவ சேவையை தொடர உள்ளதாக செவிலியர் கூறியுள்ளது பலருக்கு நெகிழ்ச்சியைத் தந்துள்ளது.

இதுகுறித்து ரேஷ்மா மோகன்தாஸ் விரிவான பேட்டி அளித்துள்ளார்…  “மூத்த தம்பதிகளில் மரியம்மே எனபவரை  கொரோனோ ICU வார்டில் அருகில் இருந்து கவனித்து வந்தேன். 10 நாட்களுக்குப் பிறகு கொரோனாவின் ஆரம்ப அறிகுறியை என்னுள் உணர்ந்தவுடன்  மருத்துவக் குழுவிடம் அதனை தெரிவித்தேன். 

சோதனை முடிவுகள் பாசிட்டிவ் எனக்  காட்டியதால் தீவிர சிகிச்சைக்கு பின் தற்போது முழுமையாக குணமடைந்து விட்டேன். ஆனாலும் மருத்துவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கியதால் தற்போது திரிபுனிதுராவில்  எனது வீட்டில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறேன்.

முன்னதாக  மருத்துவ விடுதியில் தங்கி இருந்தபோது, கொரோனா  அறிகுறிகளை உணர்ந்தவுடன் உடனடியாக பிறரிடமிருந்து என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.   விரைவில் பணிக்குத் திரும்புவேன்” எனக் கூறியுள்ளார்.

செவிலியர் ரேஸ்மாவின் நெகிழ்ச்சியூட்டும் இந்த நேர்காணலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்…

கொரோனாத் தொற்றை உணர்ந்தவுடன் சுயதனிமை  செய்துகொள்வதும், அதனை வெளிப்படுத்துவதும் முதற் கடமை என்பதை உணர்த்துவதற்கும் இவர் சான்றாகியுள்ளார்…