பெங்களூரு:

எம்ஏ நகைக்கடை மோசடியில் முக்கிய நபரான சிவாஜி நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரோஷன் பெய்க், விசாரணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வு குழு (Special Investigation Team (SIT) நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மாநில அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள அதிருப்தி எம்எல்ஏக்களில் ரோஷன் பெய்க்கும் ஒருவர். இவர் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ள நிலையில், விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் இணைவார் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில்,  ரோஷன் பெய்க்,  வரும் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி உள்ளது.

ஐஎம்ஏ நகைக்கடை நிறுவனத்தில் முதலீடு செய்த பொதுமக்களின் பணம் ரூ.1600கோடியுடன், அதன்  உரிமையாளர் முகமது மன்சூர்கான் தலைமறைவான நிலையில், பல முக்கிய அரசியல்வாதிகள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், சிவாஜிநகர் சட்டமன்ற உறுப்பினர் ரோஷன் பெய்க்,  தன்னிடம் ரூ.400 கோடியைப் பெற்றுவிட்டு அதை திருப்பித் தர மறுத்துவிட்டதாகவும் மன்சூர்கான் வெளியிட்ட ஆடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் குறித்து கர்நாடக மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. ஆனால், இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ரோஷன் பெய்க் கூறி வருகிறார்.

தற்போது கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் பரபரப்புக்கு இடையில், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏவான ரோஷன் பெய்க் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

ரோஷன் பெய்க் சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தல் முடிவு வெளியானபோது, கர்நாடக மாநிலத்தில்,  காங்கிரஸின் தோல்விக்கு சித்தராமையாதான் காரணம். மாநில தலைவர் தினேஷ் குண்டுராவுக்கு அரசியல் தெரியாததால் தோல்விக்கு காரணமாக இருந்துவிட்டார்” என கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து அவர்  காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

‘இந்த நிலையில் ரோஷன் பெய்க் நேற்று பெங்களூருவில் சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமாரை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். ரோஷன் பெய்கின் ராஜினாமா அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் காங்கிரஸில் இருந்து விலகி, விரைவில் பாஜகவில் இணைவார் என  தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்மீதான விசாரணையை கர்நாடக அரசு முடுக்கி விட்டுள்ளது.