கொரோனாவால் மரணித்த மருத்துவர்களுக்கு ‘சிறப்பு கெளரவம்’ கோரும் ஐஎம்ஏ!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் மரணமடைந்த மருத்துவர்களுக்கு ‘உயிர் தியாகிகள்’ பட்டம் கொடுக்கப்பட வேண்டுமென்றும், அப்படி மரணமடைந்த 382 மருத்துவர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ அசோசியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவர்கள், சாதாரண குடிமகனைவிட, கொரோனாவால் 4 முறை அதிகமாகவும், தனியார் மருத்துவர்களுடன் ஒப்பிடுகையில் 8 முறை அதிகமாகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்நிலையில், ஒவ்வொரு நாடும் தங்களின் சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது உலக சுகாதார நிறுவனம்(WHO).

தனது சுகாதாரப் பணியாளர்களை, பாதுகாப்பாக வைத்திராத எந்த நாடோ அல்லது மருத்துவமனையோ, தனது கொரோனா நோயாளிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்று அறிவுறுத்தியுள்ளது அந்த அமைப்பு.