தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கினாலும், கடந்த ஒருவாரமாக வெயில் வாட்டி வதைத்தது. வட கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. அதனால் இயல்பு அளவை விட 10 சதவீதம் குறைவாகவே வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம்,‌ ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

குமரிக்கடல் பகுதியில் சூறை காற்று வீச வாய்ப்புள்ளதால் அங்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை‌ விடுக்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 7 செ.மீட்டர் அளவு மழையும், ராமநாதபுரத்தில் 4 செ.மீட்டர் அளவு மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு அல்லது அதிகாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.